பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 16 SEP 2024 4:08PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகாக்களான சர்பானந்த சோனோவால் அவர்களே, சாந்தனு தாக்கூர் அவர்களே, தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களே, இதர மதிப்புமிக்க விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே,

'வளர்ச்சியடைந்த இந்தியா'-வின் பயணத்தில் இன்றைய தினம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்தப் புதிய தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பின் புதிய நட்சத்திரமாகும். இந்த முனையம் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் திறனை விரிவுபடுத்தும். 16 மீட்டருக்கும் அதிகமான ஆழம் மற்றும் 300 மீட்டருக்கும் அதிக நீளமுள்ள பெர்த்துடன், இந்தப் புதிய முனையம் இந்தத் துறைமுகத்தின் திறனை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இது வ.உ.சி. துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைப்பதுடன், இந்தியாவின் அந்நியச் செலாவணியையும் மிச்சப்படுத்தும். உங்கள் அனைவருக்கும், தமிழக மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வ.உ.சி. துறைமுகம் தொடர்பான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, இந்தத் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை அதிகரிக்க பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பிப்ரவரி மாதம் நான் தூத்துக்குடி சென்றபோது, துறைமுகம் தொடர்பான மேலும் பல பணிகளும் தொடங்கப்பட்டிருந்தன. இன்று இந்தப் பணிகள்  வேகமாக முன்னேறுவதைப் பார்ப்பது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. இந்தப் புதிய முனையத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக இருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதாவது, கடல்சார் துறையில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் அடையாளமாக இந்த முனையம் இருக்கும்.

நண்பர்களே,

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இங்குள்ள துறைமுக உள்கட்டமைப்பில் மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் 17 நடுத்தர துறைமுகங்கள் உள்ளன. இதன் காரணமாக தமிழ்நாடு தற்போது கடல்சார் வணிகக் கட்டமைப்பின் குறிப்பிடத்தக்க மையமாக விளங்குகிறது. துறைமுகம் சார்ந்த மேம்பாட்டு இயக்கத்தை மேலும் துரிதப்படுத்த வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையத்தை உருவாக்கி வருகிறோம். இதற்காக 7,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி. துறைமுகத்தின் திறனை நாங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். அதாவது நாட்டின் கடல்சார் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை எழுத வ.உ.சி. துறைமுகம் தயாராக உள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் இன்றைய கடல்சார் பணியானது உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை. நிலையான மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட வளர்ச்சிக்கான பாதையை இந்தியா இப்போது உலகிற்கு வெளிக்காட்டி வருகிறது, இது நமது வ.உ.சி துறைமுகத்தில் தெளிவாகத் தெரிகிறது. இத்துறைமுகம், பசுமை ஹைட்ரஜன் சேவை மையமாகவும், கடல் காற்றாலை ஒருங்கிணைப்பு துறைமுகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகம் தற்போது சந்தித்து வரும் பருவநிலை மாற்ற சவால்களைக் கையாள்வதில் நமது முன்முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் புதுமையும், ஒத்துழைப்பும் நமது மிகப்பெரிய பலமாகும். இன்று திறக்கப்பட்ட புதிய முனையம் இந்த வலிமைக்கு சான்றாகும். நன்கு இணைக்கப்பட்ட இந்தியாவை உருவாக்க நாம் கூட்டாகப் பணியாற்றி வருகிறோம். இன்று, நாடு முழுவதும் சாலைகள், நெடுஞ்சாலைகள், நீர்வழிகள் மற்றும் வான்வழிகள் விரிவடைந்ததன் மூலம் இணைப்பு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியா தனது நிலையை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு முக்கிய பங்குதாரராக மாறி வருகிறது. இந்தியாவின் இந்த வளர்ந்து வரும் வலிமைதான் நமது பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம். இதே வலிமை இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வேகமாக மாற்றும். இந்தியாவின் திறன்களை தமிழ்நாடு மேலும் மேம்படுத்தி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வ.உ.சி. துறைமுகத்தின் புதிய முனையத்தை அமைத்துள்ள உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

வணக்கம்.

-----

(Release ID 2055374)

TS/PKV/KPG/KR


(Release ID: 2070818) Visitor Counter : 22