நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோல் இந்தியா நிறுவனம் 50-வது நிறுவன தினத்தை எதிர்காலத்திற்கான தொலைநோக்குடன் கொண்டாடுகிறது – வளர்ச்சியடைந்த இந்தியா

Posted On: 04 NOV 2024 11:01AM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனம் (சிஐஎல்), தனது 50-வது நிறுவன தினத்தை கொல்கத்தாவில் உள்ள கோல் இந்தியா தலைமையகத்தில் கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகவும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு கடந்த ஐந்து தசாப்தங்களாக நாட்டின் எரிசக்தித் துறைக்கு சிஐஎல் ஆற்றியுள்ள  பங்களிப்புகளைக் கொண்டாடியதோடு மட்டுமல்லாமல், அதன் எதிர்கால முயற்சிகள் மற்றும் உத்திசார்ந்த பாதைக்கான அடித்தளத்தையும் அமைத்தது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த தருணத்தில், மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, பொன்விழா அடையாள சின்னத்தை அறிமுகப்படுத்தியதோடு "அங்காரா" சின்னத்தையும் வெளியிட்டார். இந்த அடையாளச் சின்னம் இந்தியாவின் எரிசக்தித் துறையின் முதுகெலும்பாக விளங்கும் சிஐஎல்-ன் முக்கிய பங்கைக் குறிக்கிறது. இது புதுமை, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மைக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்தச் சின்னம், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களின் வலிமை மற்றும் எதையும் தாங்கும் திறனை உள்ளடக்கி உள்ளது. அவர்களின் தைரியத்தையும் அர்ப்பணிப்பையும்கூட இது எடுத்துக்காட்டுகிறது. இந்த சின்னம், ராயல் பெங்கால் புலியின் மீதான ஈர்ப்பால் உருவாக்கப்பட்டது.

கிஷன் ரெட்டி தனது உரையின் போது, 50 ஆண்டுகால செயல்பாட்டின் மைல்கல்லை எட்டியதற்காக, கோல் இந்தியா நிறுவன (சிஐஎல்) அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார், மேலும், நிலக்கரி உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியைக் குறைக்க, விநியோகத்தை அதிகரிப்பது ஆகியவை கோல் இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சுரங்கத் தொழிலாளர்களின் நலன் மற்றும் சுரங்க மூடல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மறுவாழ்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். "கோல் இந்தியாவின் உற்பத்தியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். மேலும் 2023-24 நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் செயல்திறனுடன் இணைந்த ஊக்கத்தொகைகளை, அவர்களுக்காக செயல்படுத்துவதற்கான நிர்வாகத்தின் முடிவை நான் பாராட்டுகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம் வெளிப்படையான ஒதுக்கீடு செய்வதன் வாயிலாக, நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க நிலக்கரி சுரங்கங்கள் சிறப்பு விதிமுறை (சிஎம்எஸ்பி) சட்டம் 2015-ல் இயற்றப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். எஃகு, சிமென்ட் மற்றும் மின் உற்பத்தி போன்ற துறைகளுக்கு நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்வதில், இந்த முயற்சி முக்கியமானது. 2020-ம் ஆண்டில் வணிக நிலக்கரி சுரங்கம் தொடங்கப்பட்டது. இது வெளிப்படைத்தன்மை, வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி, நிலக்கரித் துறையில் வாய்ப்புகளை ஏற்படுத்த உதவியது என்றும் அவர் கூறினார். கோல் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு குறித்து  நம்பிக்கை தெரிவித்த அவர், தற்போதைய திறந்த சந்தை சூழ்நிலையில், போட்டியிடுவதற்கான திறமையும் அர்ப்பணிப்பும் நிறுவனத்திற்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியாவின் எரிசக்தி உற்பத்தியில்  நிலக்கரி முக்கிய அங்கமாக இருக்கும் என திரு ரெட்டி குறிப்பிட்டார். அதே நேரத்தில் நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதிக முதலீடு செய்து வருவதுடன் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொள்கிறது என்றார். அனல் மின் நிலையம் அமைத்தல், முக்கியமான கனிம வளங்களை கையகப்படுத்துதல் உள்ளிட்ட கோல் இந்தியா நிறுவனத்தின் பன்முகப்பட்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.

 

வளர்ச்சியடைந்த இந்தியா முன்முயற்சியில், கோல் இந்தியா நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தப் பொறுப்பை அது ஏற்க வேண்டும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நிலக்கரித் துறை செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியுடன் ஒப்பிடுகையில் இந்திய நுகர்வோருக்கு கோல் இந்தியா நிறுவனம் குறைந்த விலையிலேயே நிலக்கரியை வழங்குகிறது என்றார். மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 2024 அக்டோபர் 28, நிலவரப்படி 31.6 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி ஆய்வு குறித்த செயல்திட்ட அறிக்கையையும் திரு கிஷன் ரெட்டி வெளியிட்டதுடன், சுரங்க மூடல் போர்ட்டலையும் திறந்து வைத்தார். மேலும் வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் நிகாஹி திட்டத்தில் ₹ 250 கோடி முதலீட்டில் 50 மெகாவாட் சூரியசக்தி மின் நிலையத்தை அமைக்கவிருப்பதாக அவர் அறிவித்தார். இதன் மூலம் 49 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவன மற்றும் தனிநபர் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி விழாவை நிறைவு செய்த அமைச்சர், கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வெற்றிக்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்தார்.

*

(Release ID: 2070509)

TS/MM/KPG/KR




(Release ID: 2070564) Visitor Counter : 23