பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் கெவாடியாவில் நடந்த தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
31 OCT 2024 3:25PM by PIB Chennai
ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளைப் போலவே, அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வும் ஒட்டுமொத்த தேசத்தையும் புதிய ஆற்றலால் நிரப்புகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தேசிய ஒற்றுமை தினத்தன்று எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்த முறை, தேசிய ஒற்றுமை தினம் ஒரு அசாதாரண தற்செயல் நிகழ்வைக் கொண்டுள்ளது. ஒருபுறம் ஒற்றுமையின் திருநாளைக் கொண்டாடுகிறோம், மறுபுறம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறோம். தீபாவளி முழு நாட்டையும் ஒளியின் மூலம் இணைக்கிறது. முழு நாட்டையும் ஒளிரச் செய்கிறது. இப்போது தீபாவளி பண்டிகை பாரதத்தை உலகத்துடன் இணைக்கிறது. பல நாடுகளில் தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு மற்றும் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், பாரதத்தின் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகள்.
நண்பர்களே,
பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக கடந்த பத்து வருடங்கள், முன் எப்போதும் இல்லாத சாதனைகளால் நிறைந்துள்ளன. இன்று, அரசின் ஒவ்வொரு செயலும், பணியும் தேசிய ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' மூலம் ஒருமைப்பாடு கருத்து மேலும் வலுப்படுத்தப்படுகிறது.
நண்பர்களே,
நமது ஒற்றுமைக்கான முயற்சிகளின் கீழ், பாரதத்தின் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பாரதத்தின் வளங்களின் விளைவுகளை மேம்படுத்தவும், புதிய முன்னேற்றத்தை நோக்கி 'வளர்ந்த இந்தியா’ கனவை முன்னெடுத்துச் செல்கிறோம். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதை நோக்கி நாங்கள் இப்போது பணியாற்றி வருகிறோம். சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு 'ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு' என்ற அர்ப்பணிப்பும் நிறைவேற்றப்பட்டிருப்பதில் இன்று முழு நாடும் மகிழ்ச்சி அடைகிறது.
நண்பர்களே,
பாரதத்தின் வளர்ந்து வரும் வலிமை மற்றும் நாட்டிற்குள் உள்ள ஒற்றுமை உணர்வு ஆகியவற்றால் சில சக்திகள், கோணல் சிந்தனைகள் மிகவும் கலக்கமடைந்துள்ளன. இந்தியாவிற்குள்ளும் வெளியேயும் உறுதியற்ற தன்மையையும் குழப்பத்தையும் பரப்ப முயற்சிக்கும் மக்கள் உள்ளனர். பாரதத்தின் பொருளாதார நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். இந்த சக்திகள் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தியை அனுப்ப விரும்புகின்றன. பாரதம் பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகின்றன... நமது ஆயுதப் படைகளைக் குறிவைத்து, தவறான பிரச்சாரங்களை நடத்துகின்றன. ராணுவத்திற்குள் பிளவை ஏற்படுத்த முயல்கிறார்கள்... சாதி, சமூகத்தின் பெயரால் பாரதத்தை பிளவுபடுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர். இந்திய சமூகத்தையும் அதன் ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதே அவர்களின் ஒரே குறிக்கோள். நாட்டை உடைக்க வேண்டும் என்று கனவு காண்பவர்களையும், பொய்யான முகமூடிகளை அணிந்து கொண்டு, அழிவுகரமான கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களையும் நாம் அடையாளம் கண்டு எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற நபர்கள், கருத்துக்கள், போக்குகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு எதிராக நாம் முன்னெப்போதையும் விட அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேறுவோம். மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை தின நல்வாழ்த்துகள்.
***
(Release ID: 2069851)
TS/SMB/AG/KR
(Release ID: 2070518)
Visitor Counter : 38