வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

17-வது நகர்ப்புறப் போக்குவரத்து மாநாட்டில், புவனேஸ்வர் சிறந்த நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்புக்கான விருதை வென்றது


ஒரே நாடு ஒரே போக்குவரத்து அட்டை என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை தற்போது நனவாகி வருகிறது: மத்திய அமைச்சர் திரு மனோகர் லால்

Posted On: 27 OCT 2024 6:34PM by PIB Chennai

 

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடைபெற்ற மூன்று நாள் 17-வது நகர்ப்புற போக்குவரத்து இந்தியா (UMI) மாநாடு, கண்காட்சி 2024-ன் நிறைவு விழாவில் மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் இன்று (27.10.2024) உரையாற்றினார்.

நீடித்த நகர்ப்புற போக்குவரத்துத் தீர்வுகள் தொடர்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு டோகான் சாஹு, குஜராத்  நிதி, எரிசக்தித் துறை அமைச்சர் திரு கனுபாய் தேசாய், ஒடிசா அரசின் வீட்டுவசதி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு கே சி மொஹாபத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் , பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், ரயில் கட்டமைப்பைப் பொறுத்தவரை இந்தியா தற்போது உலகில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது என்று கூறினார். மிக விரைவில் இந்திய மெட்ரோ கட்டமைப்பு இரண்டாவது பெரிய கட்டமைப்பாக மாறும் என அவர் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே போக்குவரத்து அட்டை என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை தற்போது நனவாகி வருகிறது என அவர் குறிப்பிட்டார். ஹரியானாவின் குருகிராமை 18- வது நகர்ப்புற போக்குவரத்து இந்தியா (UMI) மாநாடு, கண்காட்சி- 2025 நடைபெறும் என்று திரு மனோகர் லால் அறிவித்தார்.

அரசு உயர்மட்ட அலுவலர்கள், துறை வல்லுநர்கள் தலைமையிலான விருதுகள் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகள் விவரம்:

*சிறந்த நகர்ப்புறப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரத்துக்கான விருதை புவனேஷ்வர் வென்றது.

*கொச்சி, ஸ்ரீநகர், காந்தி நகர், சூரத், ஜம்மு, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்கள் வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றன.

17-வது நகர்ப்புற போக்குவரத்து இந்தியா (UMI) மாநாடு, கண்காட்சி - 2024 பற்றி:

இது மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் நகர்ப்புற போக்குவரத்து நிறுவனம் மூலமாகவும், குஜராத் அரசு, குஜராத் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆதரவுடனும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த நடைமுறைகளைக் காட்சிப்படுத்துதல், சமீபத்திய நகர்ப்புற போக்குவரத்து தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஆகியவை இதன் நோக்கங்களாகும்.  2200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பங்கேற்பாளர்களும் இதில் பங்கேற்றனர். இந்த கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாகும். மெட்ரோ ரயில் நிறுவனங்கள், பொதுத்துறை, தனியார் துறைகளைச் சேர்ந்த 76 கண்காட்சியாளர்கள் கண்காட்சி நிகழ்வில் பங்கேற்றனர். ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றன.

இந்த ஆண்டு மாநாடு "நகர்ப்புற போக்குவரத்துத் தீர்வுகளைத் தரப்படுத்தல்" என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தியது.   இந்தியாவில் மின்சாரப் பேருந்து சூழல் அமைப்பு, மெட்ரோ ரயில் அமைப்பு, இந்தியாவில் உள்ள சிறிய, நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற போக்குவரத்து தீர்வுகள் போன்றவை குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

*****

PLM/KV

 

 

 

 

 




(Release ID: 2068746) Visitor Counter : 28