ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மகாத்மா காந்தி தேசிய ஊர வேலை உறுதித் திட்டம் : 2006-07-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த மனித வேலை நாட்கள் 1660 கோடி; 2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மொத்த மனித வேலை நாட்கள் 2923 கோடி
Posted On:
27 OCT 2024 2:04PM by PIB Chennai
"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புற வேலைவாய்ப்பு நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 16 சதவீதம் குறைந்துள்ளது" என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அதை மறுத்து விளக்கம் அளித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005 (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்) திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது நூறு நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்கும் திட்டமாகும். இது நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2006-07-ம் நிதியாண்டு முதல் 2013-14-ம் நிதியாண்டு வரை உருவாக்கப்பட்ட மொத்த மனித வேலை நாட்கள் 1660 கோடியாக இருந்தது. அதேசமயம், 2014-15-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை மொத்த மனித வேலை நாட்கள் 2923 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தேவை சார்ந்த திட்டம் என்பதாலும், நடப்பு நிதியாண்டு நடைமுறையில் இருப்பதாலும், மனித வேலை நாட்கள் உருவாக்கம் குறித்த சரியான இலக்கை நிர்ணயிப்பது சாத்தியமில்லை. இருப்பினும், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர் நிதி ஒதுக்கீட்டுத் திருத்தத்திற்கான முன்மொழிவை அனுப்பலாம்.
நேரடிப் பணப்பரிமாற்றமும் ஆதாரும்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கான அனைத்து பணமும் தொழிலாளர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட வேண்டும்.
ஆதார் அடிப்படையிலான பணப்பரி மாற்றம் என்பது ஒரு பெரிய சீர்திருத்த செயல்முறையாகும். இதில் தொழிலாளர்களின் ஆதாரின் அடிப்படையில் பலன்கள் நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகின்றன. 26.10.2024 நிலவரப்படி, 13.10 கோடி தொழிலாளர்களுக்கு ஆதார் இணைப்பு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த செயலில் உள்ள தொழிலாளர்களில் 99.3% (13.18 கோடி) ஆகும்.
வேலை அட்டைகள் நீக்கம்:
வேலை அட்டை சரிபார்ப்பு என்பது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இந்த நடைமுறை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் ஆதார் எண்ணின் உதவியுடன் நடத்தப்படுகிறது. போலி வேலை அட்டை, வேலை செய்ய விருப்பமில்லாத குடும்பம், கிராம பஞ்சாயத்திலிருந்து நிரந்தரமாக மாறிய குடும்பம் போன்ற காரணங்களில் உரிய சரிபார்ப்புக்குப் பிறகு அட்டையை ரத்து செய்யலாம்.
தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பின் (NMMS-என்எம்எம்எஸ்) முக்கியத்துவம்:
என்எம்எம்எஸ் செயலியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்கள் இல்லாத கிராமங்களில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது ஒரு தவறான வாதம் . என்எம்எம்எஸ்-ன் அறிமுகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை செயல்படுத்துவதில் மேம்பட்ட வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதி ஒதுக்கீடு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்து வருகிறது. 2013-14-ம் நிதியாண்டில், வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.33,000 கோடியாக இருந்தது. இது நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.86,000 கோடியாக உள்ளது. இது இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மிக உயர்ந்த நிதி ஒதுக்கீடாகும்.
மாநிலங்களுக்கு நிதி விடுவிப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும் களத்தில் பணிகளுக்கான தேவைக்கேற்ப திட்டத்தை செயல்படுத்நுவதற்காக மாநிலங்களுக்கு நிதி வழங்க, மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
தொழிலாளர்களின் ஊதியம்:
தொழிலாளர்களின் ஊதியம் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்று கூறுவது சரியானதல்ல. தற்போது, 97% நிதி பரிமாற்றங்கள் சரியான நேரத்தில் நடைபெற்றுள்ளன. கூடுதலாக, தாமத இழப்பீட்டு விதிகள் இதுவரை 27 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2024-25-ம் நிதியாண்டில் தாமதங்களுக்கு ரூ. 5.27 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
2013-14-ம் நிதியாண்டில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான குறைந்தபட்ச சராசரி அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் ரூ. 155 ஆக இருந்தது. 2024-25-ம் நிதியாண்டில், குறைந்தபட்ச சராசரி அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதம் ரூ. 279 ஆக உள்ளது.
*****
PLM/KV
(Release ID: 2068660)
Visitor Counter : 187