குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு சுகாதார அறிவியல் மற்றும் ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார்

Posted On: 26 OCT 2024 5:55PM by PIB Chennai

 

 சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு சுகாதார அறிவியல் மற்றும் ஆயுஷ் பல்கலைக்கழகத்தின் இன்றைய (அக்டோபர் 26, 2024) பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு பங்கேற்றார்

இவ்விழாவில்  பேசிய குடியரசுத்தலைவர், சத்தீஸ்கரில் ஏராளமான மூலிகைகளின் சேகரிப்பு உள்ளது என்றார். பீஜா, தவ்தா போன்ற மரங்களின் மருத்துவ மகத்துவத்தை கிராமப்புற, பழங்குடி மக்கள் அறிவார்கள். இந்தப் பாரம்பரிய அறிவை ஆவணப்படுத்துதல் மற்றும் தரப்படுத்துவதன் மூலம் பாதுகாக்க  முடியும். ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் இத்தகைய தகவல்களை பரந்த அளவில் அறிவியல் ரீதியாக பயன்படுத்த முடியும்.

மலேரியா, யானைக்கால் நோய், காசநோய் போன்ற தொற்று நோய்கள் இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்த நோய்களை ஒழிக்கும் இலக்குடன் இந்திய அரசு முன்னேறி வருகிறது. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் போராளிகளாக, சுகாதார பிரச்சினைகள் குறித்து சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். அவர்கள் கொள்கை வகுப்பாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட முடியும் என்று அவர் கூறினார்.

கிராமப்புற பகுதிகளுக்கு பயணம் செய்வதன் மூலம் மருத்துவர்கள் மக்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டறிய முடியும். அவர்கள் கிராமப்புறங்களில் தங்கியிருப்பது அவர்களின் அனுபவங்களை வளப்படுத்துவதுடன், சமூகம் மற்றும் நாட்டின் மீதான அவர்களின் கடமை உணர்வு வலுப்பெறும் என்றும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார்மருத்துவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்க்கையின் சில ஆண்டுகளை கிராமப்புறங்களுக்கு அர்ப்பணிப்பது குறித்து பரிசீலிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதான மரியாதை உணர்வை சமூக பிரச்சினைகளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பயன்படுத்த முடியும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். உதாரணமாக, போதைப்பொருளை பயன்படுத்துவது  மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பது மட்டுமின்றி, அவர்களின் சமூக, பொருளாதார அந்தஸ்தையும் குறைக்கிறது என்பதை மருத்துவர்கள் மக்களுக்கு விளக்கலாம். இதேபோல், ரத்தம் மற்றும் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் மக்களை ஊக்குவிக்கலாம் என்று அவர் கூறினார்.

பட்டமளிப்பு விழா என்பது கொண்டாடுவதற்கும், தங்களின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதற்கும் ஒரு சந்தர்ப்பம் என்று மாணவர்களிடம் குடியரசுத்தலைவர் கூறினார். அவர்களின் எதிர்காலத்தை திட்டமிடும் போது, சமூகமும் அவர்களின் கல்விக்கு பங்களித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். சமூகம் தங்கள் கல்விக்காக முதலீடு செய்ததை சமூகத்திற்கு திருப்பித் தருவது அவர்களின் கடமை என்பதை அவர்களுக்கு குடியரசுத்தலைவர் நினைவூட்டினார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் வளர்ச்சியடைந்த சத்தீஸ்கர் முக்கிய பங்காற்றும் என்று அவர் கூறினார். மக்களின் உற்பத்தித்திறன் மற்றும் படைப்பாற்றலை அதிகரிப்பதால்  ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு குடிமக்களின் நல்ல ஆரோக்கியம் முக்கியமானது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். எனவே, வளர்ந்த சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்குவதில் மாநில சுகாதாரப் பணியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

சத்தீஸ்கரில் இரண்டு பொறியியல் மற்றும் இரண்டு மருத்துவ நிறுவனங்களில் தாம் நடத்திய கலந்துரையாடல்களின்போது, இளைஞர்களிடையே புதிய இந்தியா தோன்றியதாகவும், உலகில் உரிய இடத்தைப் பெற முழு வலிமையுடன் முன்னேறி வரும் புதிய இந்தியாவை தாம் கண்டதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார்.

******

 

(Release ID: 2068480)

SMB/ KV

 

 

 

 

 


(Release ID: 2068499) Visitor Counter : 46