குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில்  காதி சிறப்புக் கண்காட்சி:  மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி தொடங்கி வைத்தார்

Posted On: 19 OCT 2024 9:14AM by PIB Chennai

 

தில்லியில் சிறப்புக் காதி கண்காட்சியை மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி நேற்று (18.10.2024) தொடங்கி வைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்', 'தற்சார்பு இந்தியா' ஆகிய இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், காதி கைவினைஞர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நாடு தழுவிய 'காதி மஹோத்சவ்' -வின் ஒரு பகுதியாக பண்டிகை காலங்களில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. புதுதில்லியில் உள்ள கேவிஐசி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு காதி கண்காட்சி அக்டோபர் 31ம் தேதி வரை நடைபெறும்.

இந்த கண்காட்சியில் தில்லி, ராஜஸ்தான், பீகார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, ஜம்மு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 55 காதி நிறுவனங்களின் 102 கிராமத் தொழில் பிரிவுகளைச் சேர்ந்த 157 அரங்குகள் உள்ளன. புடவைகள், ஆயத்த ஆடைகள், கைவினைப்பொருட்கள், மூலிகை - ஆயுர்வேதத் தயாரிப்புகள், தோல் பொருட்கள், கையால் செய்யப்பட்ட காகித பொருட்கள், ஊறுகாய், மசாலாப் பொருட்கள், சோப்புகள், ஷாம்புகள், தேன் உள்ளிட்ட பரந்த அளவிலான காதி - கிராமத் தொழில் தயாரிப்புகள் இதில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

தொடக்க விழாவில் பேசிய மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, அனைத்து மக்களும் அதிக அளவில் காதி - உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தில்தில்லி மக்கள் இந்த காதி கண்காட்சியைப் பார்வையிட்டு, உள்நாட்டு காதி தயாரிப்புகளை வாங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  

கதர் கிராமத் தொழில்கள் ஆணையமான கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார் கூறுகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனதின் குரல் வானொலி உரை நிகழ்ச்சியில், காதௌ தயாரிப்புகளை வாங்குமாறு மக்களை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, காந்தி ஜெயந்தி அன்று, தில்லி மக்கள் புதுதில்லியில் உள்ள 'காதி கிராமோத்யோக் பவனில்' ஒரே நாளில் ரூ. 2 கோடியே 1 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள காதி பொருட்களை வாங்கி புதிய சாதனை படைத்தனர் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் குறு,சிறு,நடுத்தர தொழில்கள் அமைச்சகம், கதர்  கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

*****

PLM/ KV

 

 

 

 



(Release ID: 2066285) Visitor Counter : 28