தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சர்வதேச தரத்தில் ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்எஸ் 2024 அழைப்பு விடுக்கிறது
Posted On:
15 OCT 2024 9:08AM by PIB Chennai
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் முதல் முறையாக ஐந்தாவது உலகத் தர கருத்தரங்கு (ஜிஎஸ்எஸ்-24) புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் நடத்தப்பட்ட இந்த மைல்கல் கருத்தரங்கு , டிஜிட்டல் மாற்றத்தின் எதிர்காலம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் அடுத்த அலையைச் செயல்படுத்துவதில் சர்வதேச தரங்களின் முக்கியப் பங்கு பற்றி விவாதித்தது. உலகம் முழுவதிலும் உள்ள 1500 முன்னணி கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் இதில் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை அடைந்துள்ளது, இது இப்போது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார். சர்வதேச தரத்தின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும், ஜனநாயகத் தன்மை கொண்டதாகவும், அனைத்து பிராந்தியங்களின் தேவைகளைப் பிரதிபலிப்பதாகவும், வளரும் நாடுகளின் தீவிர பங்கேற்பை ஊக்குவிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். "இந்த குறிப்பிடத்தக்க கருத்தரங்கை நாம் நிறைவு செய்யும் போது, நாம் நிறுவும் தரநிலைகள் தொழில்நுட்பத் தரநிலைகளுக்கு அப்பாற்பட்டவை என்று நான் நம்புகிறேன். ஆனால் அவை, பகிரப்பட்ட உலகளாவிய முன்னேற்றத்தின் எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன. இந்தப் பயணத்தை தனியாக மட்டுமின்றி, உங்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டு மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது" என்று அவர் கூறினார்.
"அடுத்த டிஜிட்டல் அலையை பட்டியலிடுதல்: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்பு மற்றும் சர்வதேச தரநிலைகள்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்தக் கருத்தரங்கு , வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் ஆளுகை மற்றும் தரப்படுத்தலுக்கு ஒத்திசைவான மற்றும் முன்னோக்கிய அணுகுமுறையின் முக்கியமான தேவையை உணர்த்தியது. ஜிஎஸ்எஸ் ஒரு உயர்மட்ட மன்றமாக செயல்பட்டு, தொழில்நுட்பம் மற்றும் தரப்படுத்தலில் மிகவும் அழுத்தமான பிரச்சினைகள் குறித்த விவாதம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான தளத்தை வழங்குகிறது.
முன்னதாக வடகிழக்கு பிராந்திய தகவல் தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அவர் தமது தொடக்க உரையில், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவின் பங்கை வலியுறுத்தினார். அறிவியல், கண்டுபிடிப்பு மற்றும் உலகின் செழிப்புக்கு உதவும் விதிகள் ஆகியவற்றின் நிலமாக இந்தியா திகழ்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
கருத்தரங்கு ஒரு உயர்மட்ட பிரிவைக் கொண்டிருந்தது, இது தொழில்துறை தலைவர்கள் மற்றும் அமைச்சர்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்கியது, கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தியது. இந்த நிகழ்வு செயற்கை நுண்ணறீவு ஆளுகைக்கான வலுவான சர்வதேச தரங்களுக்கு அழைப்பு விடுத்தது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான தர இடைவெளியை குறைக்க வேண்டியதன் அவசியத்தை இந்தக் கருத்தரங்கு வலியுறுத்தியது, அனைவருக்கும் தொழில்நுட்பம் சமமாகக் கிடைப்பதை இது உறுதி செய்தது.
முக்கிய அமர்வுகள் திறந்த மூல தொழில்நுட்பங்கள், பிளாக்செயின் அடிப்படையிலான அங்கீகாரம் மற்றும் பொது சேவைகள் மற்றும் தொழில்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஆகியவற்றை ஆராய்ந்தன, மேலும் உள்ளடக்கிய தொழில்நுட்பச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முனைந்தன. இந்த நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு தரநிலைகள் உச்சிமாநாடும் இடம்பெற்றது, இது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலான தரநிலைகள் எவ்வாறு பல்வேறு துறைகளில் புதுமைகளைத் தூண்டும், தொழில்நுட்ப முன்னேற்றங்களை மேம்படுத்தும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் (சி-டாட்) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாயா கருத்தரங்குக்கு தலைமை தாங்கினார். இந்த கருத்தரங்கின் தலைமையை இந்தியா ஏற்றுக்கொள்வது இதுவே முதல் முறையாகும். உலகளவில் டிஜிட்டல் மாற்றத்தை இயக்குவதில் சர்வதேச தரங்களின் முக்கியப் பங்கை வலியுறுத்தும் சக்திவாய்ந்த விளைவு ஆவணத்துடன் கருத்தரங்கு முடிவடைந்தது.
டிஜிட்டல் மாற்றத்தை இயக்குதல், உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைத்தல், தரநிலைகள் மூலம் புதுமை, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையேயான தர இடைவெளியைக் இடைவெளியைக் குறைத்தல், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல், நீடித்த வளர்ச்சி இலக்குகளை துரிதப்படுத்துதல், உயர்மட்ட உரையாடல்கள், செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தை நிறுவுதல், திறந்த மூலத்தை மேம்படுத்துதல், ஸ்மார்ட் நகரங்களைக் கொண்டாடுதல் ஆகியவை பற்றி இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.
உலகளாவிய தரநிலைகள் கருத்தரங்கு 2024 வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வெற்றிகரமாக அமைத்தது, உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யும் போது சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் தரப்படுத்தல் எவ்வாறு புதுமைகளை இயக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. கருத்தரங்கின் விளைவு ஆவணம் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் விவாதத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது, இது அக்டோபர் 15 முதல் 24 வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளது.
***
(Release ID: 2064906)
Visitor Counter : 45