பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

19-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்

Posted On: 11 OCT 2024 12:34PM by PIB Chennai

லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசில் உள்ள வியன்டியானில் 2024, அக்டோபர் 11 அன்று நடைபெற்ற 19 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.

இந்தோ-பசிஃபிக் பிராந்திய கட்டமைப்பு, இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் கண்ணோட்டம், குவாட் ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஆசியானின் முக்கிய பங்கினைப்  பிரதமர் தமது உரையில் வலியுறுத்தினார். கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் இந்தியாவின் பங்கேற்பு அதன் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கிய தூணாக உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். இந்த மண்டலத்தில் அமைதிக்கும் வளர்ச்சிக்கும்  சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, வளமான, விதிகள் அடிப்படையிலான இந்தோ-பசிஃபிக் பகுதி முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் இந்தோ-பசிஃபிக் பெருங்கடல் முன்முயற்சி, இந்தோ-பசிஃபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒற்றுமை மற்றும் பொதுவான அணுகுமுறை குறித்தும் பேசினார். இந்தப் பிராந்தியம் விரிவாக்கத்தை மையமாகக் கொள்ளாமல், வளர்ச்சி அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நடைமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இதனை மேலும் வலுப்படுத்த இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். நாளந்தா பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சிக்கு கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் அளித்த ஆதரவை நினைவுகூர்ந்தார். நாளந்தா பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள உயர்கல்வித் தலைவர்கள் மாநாட்டிற்கு வருமாறு கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்க பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்.

இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றை  பாதிக்கும் பிராந்திய,  சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். உலகளாவிய தெற்கில், மோதல்களின் கடுமையான தாக்கத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், உலகில் உள்ள மோதல்களுக்கு அமைதித் தீர்வு காண மனிதாபிமான அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட பேச்சுவார்த்தை,  ராஜீய பாதை பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். போர்க்களத்தில் அவற்றுக்கு எந்த தீர்வும் இல்லை என்று அவர் மேலும் கூறினார். சைபர் மற்றும் கடல்வழி சவால்களுடன் பயங்கரவாதமும் உலக அமைதிக்கும்   பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், நாடுகள் ஒன்றிணைந்து அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக லாவோஸ் பிரதமருக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். ஆசியான் அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்கும் மலேசியாவுக்கு தனது நல்வாழ்த்துகளை தெரிவித்த அவர், அதற்கு இந்தியாவின் முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

***

SMB/DL


(Release ID: 2064131) Visitor Counter : 58