சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
உலக மனநல தினம் மற்றும் டெலி மனஸின் இரண்டாவது ஆண்டினை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கொண்டாடியது
Posted On:
10 OCT 2024 3:51PM by PIB Chennai
உலக மனநல தினத்தை முன்னிட்டு தேசிய தொலை மனநலத் திட்டம், தொலைதூர மனநல உதவி மற்றும் மாநிலங்களுக்கிடையேயான வலைப்பின்னல் (டெலி மனஸ்) இரண்டாண்டு நிறைவை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று கொண்டாடியது. இந்த ஆண்டு உலக மனநல தினத்தின் கருப்பொருள்: "பணியிடத்தில் மன நலத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தருணம் இது."
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும் தேசிய சுகாதார இயக்கத்தின் நிர்வாக இயக்குநருமான திருமதி ஆராதனா பட்நாயக் டெலி மனஸ் செயலி மற்றும் டெலி மனஸ் வீடியோ அழைப்பு வசதியை தொடங்கி வைத்தார். உலக சுகாதார அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச். ஓஃப்ரின், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு சவுரப் ஜெயின், தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் பார்த்திமா மூர்த்தி மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
டெலி மனஸ் செயலி என்பது ஒரு விரிவான மொபைல் தளமாகும். இது மனநலப் பிரச்சினைகளுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. செயலியில் சுய பாதுகாப்பு பற்றிய உதவிக்குறிப்புகள், துயர சமிக்ஞைகளை அங்கீகரித்தல், மன அழுத்தம், பதற்றம் மற்றும் உணர்ச்சிப் போராட்டங்களின் ஆரம்ப அறிகுறிகளை நிர்வகித்தல் உள்ளிட்ட தகவல்களின் நூலகம் உள்ளது. இது பயனர் நட்பு அனுபவத்தை வழங்குகிறது. இந்த செயலி, பயனர்களை இலவசமாக இணைக்கவும், உடனடி ஆலோசனைக்கு இந்தியா முழுவதும் உள்ள பயிற்சி பெற்ற மனநல நிபுணர்கள் மூலம் ரகசிய மனநல ஆலோசனையைப் பெறவும் உதவும்.
டெலி மனசில் வீடியோ ஆலோசனைகள் என்பது ஏற்கனவே இருக்கும் ஆடியோ அழைப்பு வசதிக்கு மற்றொரு மேம்படுத்தலாகும். மனநல நிபுணர்களால் இது மேற்கொள்ளப்படும். இந்த வசதி முதலில் கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொடங்கப்படும்; பின்னர் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
திருமதி ஆராதனா பட்நாயக் தனது தொடக்க உரையில், "மன நலம் உடல் நலத்திற்கு அடிப்படையானது. தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மிக உயர்ந்த நிலையில் செயல்படுவதிலும், சமூகத்திற்கு உதவுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற பணிச்சூழல்களும் சாதகமற்ற பணிச்சூழல்களும் ஒருவரின் பொது உடல்நலம், நல்வாழ்வு, மன நலம், பணியில் ஈடுபாடு அல்லது உற்பத்தித்திறன் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பணியிடத்தில் அதிக உற்பத்தி திறனுக்கு ஒரு நல்ல பணிச்சூழலையும் வேலை-வாழ்க்கை சமநிலையையும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.
"டெலி மனஸ் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 14.5 லட்சத்துக்கும் அதிகமான அழைப்புகளைக் கையாண்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இளம் பருவத்தினரின் மன நலம் மற்றும் வளரிளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய திருமதி பட்நாயக், "டெலி மனஸ் செயலி பற்றிய விழிப்புணர்வை உறுதி செய்ய தகவல், கல்வி மற்றும் தொடர்பு (ஐஇசி) தேவை" என்பதை வலியுறுத்தினார்.
பணியிடத்தில் மன நலம் பற்றி பேசிய உலக சுகாதார அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச். ஓஃப்ரின், பாலின சமத்துவமின்மை, மரியாதையற்ற, ஆதரவற்ற சக ஊழியர்கள், வேலை-வாழ்க்கை சமநிலை இல்லாமை, வேலை திருப்தி போன்ற பிரச்சினைகள் பணியிடத்தில் உள்ள ஊழியர்களுக்கு மனநல சவால்களுக்கு வழிவகுக்கின்றன என்றார். ஆதரவான பணிச்சூழலை உருவாக்குவதில் முதலாளிகள், மேலாளர்களின் பொறுப்பை அவர் வலியுறுத்தினார்.
இரண்டு ஆண்டுகளாக டெலி-மனஸை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக அமைச்சகத்தை வாழ்த்திய அவர், "டெலி-மனஸ் குறித்த உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடு, மன நலத்திற்கு வெற்றிகரமான மாதிரியைக் காட்டியுள்ளது. இது நன்றாக வேலை செய்யும் திறனைக் கொண்டுள்ளது. முதன்மை சுகாதாரம், குறிப்பாக ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள், மன நலம் மற்றும் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. " பணியிடத்தில் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
நாட்டின் மனநலனை வளர்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை டெலி-மனஸ் பிரதிபலிக்கிறது. டெலி-மனசின் கட்டணமில்லா உதவி எண்கள் 14416 அல்லது 1-800-891-4416 20 பல மொழிகளில் ஆதரவை வழங்குகின்றன. மேலும் அழைப்பாளர்கள் மற்றும் மனநல நிபுணர்களிடையே தகவல்தொடர்புகளை எளிதாக்குவது முக்கியமானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063830
*******
SMB/KR/DL
(Release ID: 2063879)
Visitor Counter : 70