குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

70-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது

திரைப்படங்களும், சமூக வலைதளங்களும் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஊடகங்கள்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

प्रविष्टि तिथि: 08 OCT 2024 7:53PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பல்வேறு பிரிவுகளில் 70-வது தேசிய திரைப்பட விருதுகளை புதுதில்லியில் இன்று (அக்டோபர் 8, 2024) வழங்கினார். 2022 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதை நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது திரைப்படங்கள் நமது சமூகத்தின் கலை உணர்வை பிரதிபலிப்பதாக கூறினார். வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது. கலையின் தரம் மாறுகிறது. புதிய அபிலாஷைகள் எழுகின்றன. புதிய பிரச்சினைகள் முளைக்கின்றன. புதிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த அனைத்து மாற்றங்களுக்கிடையே, அன்பு, இரக்கம் மற்றும் சேவை ஆகியவற்றின் மாறாத மதிப்புகள் இன்னும் நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. இந்த விழுமியங்கள் அனைத்தும் இன்று வழங்கப்படும் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதை நாம் காணலாம்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும், பல மொழிகளில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால், இந்திய சினிமா உலகின் மிகப்பெரிய திரைப்படத் துறையாக திகழ்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது மிகவும் மாறுபட்ட கலை வடிவமாகும். விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு, திரையுலகுடன் தொடர்புடையவர்களையும் பாராட்டினார்.


தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற திரு. மிதுன் சக்ரவர்த்திக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். ஏறக்குறைய ஐந்து தசாப்த கால தனது கலைப் பயணத்தில், மிதுன்  திரையில் தீவிரமான கதாபாத்திரங்களை சித்தரித்தது மட்டுமல்லாமல், பல சாதாரண கதைகளை தனது தனித்துவமான ஆற்றலுடன் வெற்றிகரமாக சித்தரித்துள்ளார் என்று அவர் கூறினார்.

விருது பெற்ற திரைப்படங்களின் மொழிகள் மற்றும் பின்னணிகள் வெவ்வேறாக இருந்தாலும், அவை அனைத்தும் இந்தியாவின் பிரதிபலிப்பாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தப் படங்கள் இந்திய சமூகத்தின் அனுபவங்களின் பொக்கிஷம். இந்திய பாரம்பரியமும் அவற்றின் பன்முகத்தன்மையும் இந்தப் படங்களில் உயிர்ப்புடன் வருகின்றன.

சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் திரைப்படங்களும், சமூக ஊடகங்களும் மிகவும் சக்திவாய்ந்த ஊடகங்களாக உள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் வேறு எந்த ஊடகத்தையும் விட இந்த ஊடகங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்று வழங்கப்படும் 85 விருதுகளில் 15 விருதுகள் மட்டுமே பெண் விருதாளர்களால் பெறப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு திரையுலகம் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

அர்த்தமுள்ள திரைப்படங்களுக்கு பெரும்பாலும் பார்வையாளர்கள் கிடைப்பதில்லை என்றும் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். விழிப்புணர்வுள்ள குடிமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசுகள் பார்வையாளர்களுக்கு அர்த்தமுள்ள சினிமாவின் பரவலை அதிகரிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
                                        ***

PKV/KV/KR


(रिलीज़ आईडी: 2063386) आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Telugu , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Kannada