உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது


2026-க்குள் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்- திரு அமித் ஷா

Posted On: 07 OCT 2024 6:24PM by PIB Chennai

இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா முதலமைச்சர்கள், பீகார் துணை முதலமைச்சர், ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த மாநிலங்களுடன் ஒத்துழைக்கும் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தின் போது பங்கேற்றனர். மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு பணியக இயக்குநர், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய ஆயுத காவல்  படைகள் மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களும், 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க உறுதிபூண்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என்றும், நமது 8 கோடி பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு இதில் மிக முக்கிய பங்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தொலைதூரப் பகுதிகளுக்கும் பழங்குடியின சமூகங்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டுசெல்வதில் இன்று மிகப்பெரிய தடையாக இருப்பது நக்சலிசம் என்று அவர் கூறினார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து இணைப்பு, வங்கி, தபால் சேவைகள் கிராமங்களை சென்றடைவதை நக்சலிசம் தடுக்கிறது என அவர் தெரிவித்தார். வளர்ச்சி, சமூகத்தின் கடைசி நபரையும் சென்றடைவதை உறுதி செய்ய, நக்சலிசத்தை நாம் முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.

2019 முதல் 2024 வரை நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பெரும் வெற்றி கிடைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் மூலம், இடதுசாரி தீவிரவாதத்தை ஒடுக்கி புதிய சகாப்தத்தைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார். இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற அணுகுமுறையுடன் அரசு திட்டங்களை 100% செயல்படுத்துவதன் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக மேம்படுத்த விரும்புகிறோம் என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.

30 ஆண்டுகளில் முதல் முறையாக, இடதுசாரி தீவிரவாதத்தால் (LWE) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2022-ல் 100-க்கும் குறைவாக இருந்தது எனவும், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். 2014 முதல் 2024 வரை நக்சல் தொடர்பான சம்பவங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 14 முன்னணி நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர் கூறினார். இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளது என்றும், 2026 மார்ச் மாதத்திற்குள், அனைவரின் ஒத்துழைப்புடன், அது முற்றிலும் ஒடுக்கப்படும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2062905                                          

***

PLM/RS/DL


(Release ID: 2062937) Visitor Counter : 45