உள்துறை அமைச்சகம்
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் 2024 அக்டோபர் 07 அன்று புதுதில்லியில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை வகிப்பார்
Posted On:
05 OCT 2024 7:02PM by PIB Chennai
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் 2024 அக்டோபர் 07 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை தாங்குவார். ஆந்திரா, பீகார், சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், தெலங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஆதரவு அளிப்பதில் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஐந்து மத்திய அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மற்றும் மத்திய, மாநில மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளின் மூத்த அதிகாரிகளும் விவாதங்களில் பங்கேற்பார்கள்.
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், 2026 மார்ச் மாதத்திற்குள் இடதுசாரி தீவிரவாத அச்சுறுத்தலை முழுமையாக முறியடிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதன் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 06 அன்று இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார். அந்தக் கூட்டத்தின்போது, இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக அமைச்சர் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். மோடி அரசின் வியூகம் காரணமாக, இடதுசாரி தீவிரவாதத்தால் ஏற்படும் வன்முறை 72% குறைந்துள்ளது. 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் இறப்புகளில் 86% குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு, இதுவரை, இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான ஆயுதமேந்திய குழுக்களின் உறுப்பினர்களை ஒழிப்பதில் பாதுகாப்புப் படையினர் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைக் கண்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 202 இடதுசாரி தீவிரவாதிகள் ஒழிக்கப்பட்டுள்ளனர், 2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 723 இடதுசாரி தீவிரவாத உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர், 812 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 2024-ல் வெறும் 38 ஆகக் குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தொலைதூர பகுதிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு செல்வதற்கு சாலை மற்றும் மொபைல் இணைப்புக்கு உத்வேகம் அளிப்பது உட்பட பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 14,400 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 6,000 செல்போன் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
***************
BR/KV
(Release ID: 2062608)
Visitor Counter : 39