பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக உற்பத்தி மையமாக இந்தியா இருப்பதால் பாதுகாப்பு தொழில்துறையை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என்று இந்தியப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 7- வது ஆண்டுக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்

Posted On: 04 OCT 2024 2:34PM by PIB Chennai

2024, அக்டோபர் 04 அன்று புதுதில்லியில் நடைபெற்ற இந்திய பாதுகாப்புத் தளவாட  உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (எஸ்ஐடிஎம்) ஏழாவது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தற்போது நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் ஒரு வலுவான பாதுகாப்பு தொழில்துறை தளத்தை உருவாக்குவதற்கான நினைவூட்டல் என்று குறிப்பிட்டார். இது காலப்போக்கில் வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

பிரதமரின் தொடர்ச்சியான  மூன்றாவது பதவிக்காலம், வலுவான, புதுமையான மற்றும் தற்சார்பு பாதுகாப்புச் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று திரு ராஜ்நாத் சிங் உறுதிபடக் கூறினார்.

அரசின் முயற்சிகள் காரணமாக, நாட்டில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இந்தியாவின் பாதுகாப்புத் தொழிலை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். 2023-24-ம்  நிதியாண்டில் பாதுகாப்பு தொழில்துறை ஏற்றுமதியை ரூ .21,000 கோடிக்கு மேல் சாதனை அளவாக உயர்த்துவதில் தனியார் துறையின் முக்கியப்  பங்களிப்பை அவர் பாராட்டினார்அதே வேளையில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி புள்ளிவிவரங்களை மனதில் வைத்து, இலக்கு சார்ந்த அணுகுமுறையுடன் இரண்டிற்கும் இடையிலான விகிதத்தைக் குறைக்க முயற்சிக்க வேண்டும் என்று தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்தார்.

2023-24 நிதியாண்டில் வருடாந்தர பாதுகாப்பு உற்பத்தி ரூ .1.27 லட்சம் கோடியை எட்டியதற்கு பாதுகாப்பு அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு ரூ.1 லட்சம் கோடியாகவும், தனியார் நிறுவனங்களின் பங்கு  ரூ.27,000 கோடியாகவும் இருந்தது. தனியார் தொழில்களின் பங்கை அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு , இணையப் பாதுகாப்பு  போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களில் தொழில்துறை அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு ராஜ்நாத் சிங் இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு தயாராக உள்ளது என்றார்.

இந்த அமர்வின் போது, பாதுகாப்பு உற்பத்தியில் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் எஸ்ஐடிஎம் சாம்பியன் விருதுகளையும் பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார். இந்த விருதுகள் இந்திய உற்பத்தியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்புக்கான பிரதிபலிப்பாகும் என்றும், இது துறையில் சிறந்த நடைமுறைகளுக்கான அளவுகோலாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.

முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், செயலாளர் (பாதுகாப்பு உற்பத்தி) திரு சஞ்சீவ் குமார், எஸ்ஐடிஎம் தலைவர் திரு ராஜீந்தர் சிங் பாட்டியா மற்றும் தொழில்துறை தலைவர்கள் இந்த அமர்வில்  கலந்து கொண்டனர்.  'இந்திய பாதுகாப்பு தொழில்துறையை மேம்படுத்துதல்: ஏற்றுமதியையும் உள்நாட்டு கண்டுபிடிப்பையும் ஊக்குவித்தல் ' என்பது இந்த அமர்வின் கருப்பொருளாகும். உலகளாவிய பாதுகாப்பு ஏற்றுமதி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கைப் பற்றி விவாதிக்க பங்குதாரர்களுக்கான ஒரு தளமாக இது அமைந்தது.

***

SMB/RR/KR/DL

 


(Release ID: 2062129)