சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் உரை
Posted On:
30 SEP 2024 7:07PM by PIB Chennai
அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா மற்றும் நித்தி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் ஆகியோர் முன்னிலையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், "இரண்டு மரியாதைக்குரிய மற்றும் சிறந்த மனிதர்கள் இந்த மருத்துவமனை மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள்: டாக்டர் ராம் மனோகர் லோஹியா மற்றும் திரு அடல் பிஹாரி வாஜ்பாய். இருவருக்குமே தேசம்தான் முதலிடம். அவர்கள் நமது சமூகத்திற்கும், நாட்டிற்கும் புதிய பரிமாணங்களை அளித்தனர். இந்த நிறுவனம் மற்றும் மருத்துவமனையுடன் தொடர்புடைய மக்கள், அதே திசையையும் அவர்களின் செயல்பாடுகளையும் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
நோயுற்ற மனிதகுலத்திற்கு மருத்துவர்கள் குணமளிக்கிறார்கள் என்றும், அவர்களால் மட்டுமே வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். "நீங்கள் ஒரு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள். நம் நாட்டில், மருத்துவர்கள் கடவுள்களாக நடத்தப்படுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறார்கள். நீங்கள் பரிந்துரைக்கும் மருந்துகளுடன், ஒரு குணப்படுத்தும் முயற்சி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் "என்று அவர் கூறினார்.
மருத்துவர்களுக்கும் ஏனைய சுகாதார செயற்பாட்டாளர்களுக்கும் எதிரான வன்முறைச் சம்பவங்கள் பற்றி குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், நெருக்கடியான காலங்களில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் பராமரிப்பாளர்கள் அமைதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். எந்தவொரு மருத்துவரும் தம்மிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள் துன்பப்படுவதை விரும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். "கொவிட் தொற்றுநோய்களின் போது, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், உயிர்களைக் காப்பாற்ற அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளைச் செய்தனர், ஒரு நாடு என்ற வகையில், நாங்கள் எப்போதும் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மருத்துவ துறையினரையும், தொடர்புடைய நிறுவனங்களையும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டம், பெண்களுக்கு சுகாதார சேவைகளை அணுக உதவியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார். கடந்த 10 ஆண்டுகளில், சுகாதாரத் துறையின் சாதனைகளையும் அவர் பட்டியலிட்டார். "மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டு, இந்த நிறுவனங்களில் இளநிலை படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
36 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மாணவர்கள் உட்பட ஏபிவிஐஎம்எஸ் மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பட்டங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜெ பி நட்டா, அனைத்து மாணவர்களையும் பாராட்டியதோடு, மருத்துவக் கல்வியின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதே அரசின் உயர் முன்னுரிமை என்று வலியுறுத்தினார். "இங்கு கூடியுள்ள மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் மனித வள மூலதனம்," என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில் கல்வி என்பது, ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அதிர்ஷ்டம் என்று எடுத்துரைத்த மத்திய சுகாதார அமைச்சர், "இதுபோன்ற தொழில்கல்வியை வழங்குவதற்காக, ஒரு மருத்துவ மாணவருக்கு ஆண்டுக்கு சுமார் 30-35 லட்சம் ரூபாயை அரசு செலவிடுகிறது" என்று குறிப்பிட்டார். நாட்டின் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதில், மாணவர்கள் தங்கள் திறமை, திறன்கள் மற்றும் அறிவை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார். "இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் நிலை, மேற்கத்திய நாடுகளின் நிலையை விட முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவில் உள்ள மருத்துவமனைக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிட முடியாது. நமது மருத்துவர்கள் மேற்கொள்ளும் நோயாளி பராமரிப்பு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை பலரால் புரிந்து கொள்ள முடியாது.
திறந்த மனதுடன் மனிதகுலத்திற்கு சேவை செய்ய மாணவர்களை ஊக்குவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார். "நீங்கள் இப்போது மனித உயிருக்கு மட்டுமல்ல, ஒரு உன்னதமான தொழிலின் பாதுகாவலர்களாகவும், மீட்பர்களாகவும் இருக்கிறீர்கள்" என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஏபிவிஐஎம்எஸ் இதழான "சன்ஹிதா" வின் முதல் பதிப்பையும் திரு ஜெ பி நட்டா வெளியிட, அதன் முதல் பிரதியை குடியரசுத் தலைவர் பெற்றுக்கொண்டார்.
மருத்துவ நிபுணர்களின் பொறுப்புகள், சிறப்பு, மதிப்புகள் மற்றும் இரக்ககுணம் ஆகியவை, வெற்றிக்கான முக்கிய பண்புகள் என்ற குடியரசுத் தலைவரின் ஆலோசனையை டாக்டர் வி கே பால் மீண்டும் வலியுறுத்தினார். மாணவர்கள் கல்வியாளர்களாக மாறுவதை அவர் ஊக்குவித்தார், இதனால் அவர்கள் தங்கள் அறிவையும் நிபுணத்துவத்தையும் அடுத்த தலைமுறை மருத்துவ நிபுணர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக செயலாளர் திரு அபூர்வா சந்திரா, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி திருமதி புண்யா சலிலா ஸ்ரீவத்சவா, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் திரு ஜெய்தீப் குமார் மிஸ்ரா, ஏபிவிஐஎம்எஸ் இயக்குநர் டாக்டர் (பேராசிரியர்) அஜய் சுக்லா, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள்; பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
MM/AG/DL
(Release ID: 2060453)
Visitor Counter : 39