குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்தியா ஒரு உலகளாவிய சுற்றுலாத் தலம்; அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற சுற்றுலா இங்கு உள்ளது: குடியரசு துணைத் தலைவர்
प्रविष्टि तिथि:
27 SEP 2024 3:25PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், “இந்தியா, அதாவது பாரதம், இப்போது விருப்பமான உலகளாவிய சுற்றுலாத் தலமாக உள்ளது. ஆன்மீகம், உன்னதம் மற்றும் 5,000 ஆண்டுகால நாகரிக நெறிமுறைகளின் நிலத்திலிருந்து, சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் அனைத்து பருவங்களையும் அனுபவிக்க முடியும் என்று கூறியுள்ளார்"
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அடைந்துள்ள அதிவேக வளர்ச்சியை எடுத்துரைத்த திரு தன்கர், பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக விளங்கும் சுற்றுலா, 2047-ம் ஆண்டு வாக்கில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டுள்ளது என்றார்.
புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தொடக்க உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், உலக அமைதி, பொருளாதார மேம்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதில் சுற்றுலாவின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்றைய உலகில் மிகவும் தேவைப்படும் மனிதகுலத்தின் பிணைப்புகளை சுற்றுலா இணைக்கிறது என்று அவர் கூறினார். "அமைதிக்கு சுற்றுலா பெருமளவில் பங்களிக்கிறது. முழு உலகமும் அமைதிக்காக ஏங்குகிறது, எங்கும் எந்தவொரு மோதலும் அனைவருக்கும் ஒரு வலியாக உள்ளதுடன், விநியோகச் சங்கிலிகள் மற்றும் பொருளாதாரங்களை சீர்குலைக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் புரட்சியின் வெற்றிக் கதையை சுற்றுலா பின்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்த குடியரசுத் துணைத் தலைவர், பொருளாதாரத்திற்கு அதிக அளவு பங்களிப்பு, தொழிலாளர் சக்தியை மேம்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார். "ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் ஒரு கனவுடன் வருகிறார்கள். அவர் ஒரு தடையற்ற அனுபவத்தை விரும்புகிறார், இதை வழங்க நமது மனித வளங்கள் திறமையானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள மாற்றத்துக்கான பயணம் குறித்து பேசிய குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் உலகளாவிய தோற்றம் எவ்வாறு வியத்தகு முறையில் மேம்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தினார்.
"உலகில் பாரதத்தின் பிம்பம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததை விட மிகவும் வித்தியாசமானது. பாரதத்தின் தலைமைத்துவம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிலான உலகில் வேறு எந்தப் பொருளாதாரம் ஆண்டுக்கு 8% மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதாகக் கூற முடியும்? இது இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.
கழிப்பறைகள், மின்சாரம், இணையம், கல்வி மற்றும் குழாய் நீர் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதன் 1.4 பில்லியன் மக்களுக்கு கடைசி மைல் விநியோகத்தால் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதை அவர் மேலும் சுட்டிக்காட்டினார். "கழிப்பறைகள், மின்சாரம், இணையம், கல்வி மற்றும் குழாய் நீர் தொடர்பாக கடைசி மைல் விநியோகத்துடன் 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை வழங்கப்படுகிறது," என்று திரு தன்கர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையைப் பாராட்டிய திரு தன்கர், அவரைச் சுற்றுலாவுக்கான சிறந்த தூதர் என்று அழைத்தார். "நமது பிரதமர் லட்சத்தீவில் சில நிமிடங்கள் மட்டுமே செலவிட்டார், முழு உலகமும் அதைப் பற்றி அறிந்து கொண்டது" என்று அவர் கூறினார், சுற்றுலா, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளின் உலகளாவிய அதிர்வுகளை எடுத்துரைத்தார்.
மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும், கிழக்கு மண்டல கலாச்சார மையத்தின் தலைவராகவும் தமது அனுபவத்தை விளக்கிய அவர், "நீங்கள் மேகாலயா போன்ற இடத்திற்குச் சென்றால், நீரின் தூய்மையால் ஆச்சரியப்படுவீர்கள்; இவ்வளவு சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு கிராமத்தைப் பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வெறும் பத்தாண்டுகளில் சுற்றுலாவுக்காக பாரதம் உருவாக்கியுள்ள அற்புதங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலா நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர் தமது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். "அமைச்சரவையின் ஒரு பகுதியாக நான் ஸ்ரீநகருக்குச் சென்றபோது, தெருக்களில் ஒரு டஜன் பேரை மட்டுமே பார்க்க முடிந்தது. கடந்த ஆண்டு இரண்டு கோடிக்கும் அதிகமானோர் காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர். இந்த அதிவேக வளர்ச்சி, உலகளாவிய சுற்றுலா மையமாக இந்தியா உயர்ந்து வரும் நிலைக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
பாரதத்தின் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் அதன் உலகளாவிய ஈர்ப்பு பற்றி குறிப்பிட்ட திரு தன்கர், "யுனெஸ்கோ 45 பாரம்பரிய தளங்களை பட்டியலிட்டுள்ளது. துர்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காந்த ஈர்ப்புகள். 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அழைத்து வந்த ஜி20 உச்சிமாநாடு, பாரதத்தின் உணவு வகைகள், கலாச்சார வளங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை காட்சிப்படுத்தி, பரவலான பாராட்டுகளைப் பெற்றது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
உலக சுற்றுலா வரைபடத்தில் இந்தியாவின் நிலையை உயர்த்த கூட்டு உறுதிப்பாடு தேவை என்று அழைப்பு விடுத்தார். கள யதார்த்தங்களை மதிப்பீடு செய்வதற்கும் பல்வேறு சுற்றுலாத் துறைகளில் முடிவுகளை உருவாக்குவதற்கும் பணிக்குழுக்களை உருவாக்குவதை அவர் ஊக்குவித்தார், "பயணத்தை விட பெரிய கல்வி எதுவும் இல்லை, சுற்றுலாவை விட பெரிய தடையற்ற இணைப்பு இல்லை" என்று கூறிய அவர் தமது உரையை நிறைவு செய்தார்.
2047-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து நூறாவது ஆண்டைக் கொண்டாடுவதற்கு முன்பாகவே, உத்திசார் முன்முயற்சிகள் மற்றும் திறமையான ஆதாரங்களின் ஆதரவுடன், இந்தியாவின் சுற்றுலாத் துறை, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கி நாட்டை முன்னெடுத்துச் செல்லும் என்று குடியரசுத் துணைத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் திரு. சுரேஷ் கோபி, சுற்றுலா அமைச்சகச் செயலாளர் திருமதி வித்யாவதி மற்றும் பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
PKV/RR/KR/DL
(रिलीज़ आईडी: 2059671)
आगंतुक पटल : 69