பிரதமர் அலுவலகம்
புற்றுநோய் தொடர்பான குவாட் திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு
Posted On:
22 SEP 2024 8:23AM by PIB Chennai
டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டின் இடையே, அதிபர் திரு ஜோசப் ஆர் பைடன் ஜூனியர் நடத்திய புற்றுநோய் தொடர்பான குவாட் திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுத்தல், கண்டுபிடித்து சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அதிபர் திரு பைடனின் இந்த சிந்தனைமிக்க முன்முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். இந்தோ-பசிபிக் நாடுகளில் உள்ள மக்களுக்கு மலிவான, அணுகக்கூடிய மற்றும் தரமான சுகாதார சேவையை வழங்குவதில் இந்தத் திட்டம் நீண்ட தூரம் செல்லும் என்று அவர் கூறினார். நாட்டில் வெகுஜன மக்களுக்கு கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தையும் இந்தியா மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் சுகாதார பாதுகாப்பு முயற்சிகள் குறித்துப் பேசிய அவர், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்றும், நோய்க்கான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சிகிச்சை நெறிமுறையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
புற்றுநோய்க்கு எதிரான இந்த முன்முயற்சியில் இந்தியாவின் பங்களிப்பாக, "ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்" என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் புற்றுநோய் சோதனை, பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றுக்காக 7.5 மில்லியன் அமெரிக்க டாலர் மானியத்தை அர்ப்பணிப்பதாக பிரதமர் அறிவித்தார். இந்தோ-பசிபிக் பகுதியில் கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் தடுப்புக்கான திறன் வளர்ப்புக்கான ஆதரவை இந்தியா வழங்கும் என்றும் பிரதமர் அறிவித்தார். ஜி.ஏ.வி.ஐ மற்றும் குவாட் திட்டங்களின் கீழ் இந்தியாவிலிருந்து 40 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் இந்தோ-பசிபிக் நாடுகள் பயனடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். குவாட் அமைப்பின் செயல்பாடுகள், நாடுகளுக்கானது மட்டுமல்ல, மக்களுக்கானது என்றும், அதுவே அதன் மனிதர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையின் உண்மையான சாராம்சம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆர்வமுள்ள நாடுகளுக்கு, புற்றுநோய் பரிசோதனை, பராமரிப்பு மற்றும் தொடர்ச்சிக்கான டி.பி.ஐ-யில் தொழில்நுட்ப உதவியை இந்தியா வழங்கும். டிஜிட்டல் சுகாதாரம் குறித்த உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய முன்முயற்சிக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா வழங்கும்.
புற்றுநோய்க்கு எதிரான குவாட் அமைப்பின் திட்டத்தின் மூலம், இந்தோ-பசிபிக் நாடுகளில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை சூழலியலில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய குவாட் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட உறுதியளித்தனர். நிகழ்ச்சியில் புற்றுநோய் தொடர்பான திட்டம் குறித்த கூட்டு உண்மை அறிக்கை வெளியிடப்பட்டது.
*****
BR/ KV/DL
(Release ID: 2059145)
Visitor Counter : 26
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam