பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

297 பழங்கால பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது, அமெரிக்கா

Posted On: 22 SEP 2024 9:04AM by PIB Chennai

நெருங்கிய இருதரப்பு உறவுகளைக் கருத்தில் கொண்டும், அதிக கலாச்சார புரிதலை வளர்ப்பதற்காகவும், அமெரிக்க வெளியுறவுத் துறையின் கல்வி மற்றும் கலாச்சார விவகாரங்கள் பணியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும்  இந்திய தொல்லியல் துறை ஆகியவை ஜூலை 2024 இல் கலாச்சார சொத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்க அதிபர் திரு பைடன் மற்றும்  இந்திய பிரதமர்   திரு நரேந்திர மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது.

இந்தியாவிலிருந்து திருடப்பட்ட அல்லது கடத்தப்பட்ட 297 பழங்கால பொருட்களை பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின்போது திரும்ப ஒப்படைக்க அமெரிக்க தரப்பு உதவியது. டெலாவேரின் வில்மிங்டனில் நடந்த இருதரப்பு சந்திப்பின் ஒரு பகுதியாக அடையாள ஒப்படைப்பு நிகழ்வின்போது பிரதமர் மற்றும் அதிபர் திரு பைடனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில  பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கலைப்பொருட்களைத் திருப்பி அளிக்க அதிபர் திரு  பைடன் அளித்த ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தப் பொருட்கள் இந்தியாவின் வரலாற்று பொருள்சார் கலாச்சாரத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல, அதன் நாகரிகம் மற்றும் உணர்வின் உள்மையத்தை உருவாக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

தொல்பொருட்கள் கி.மு 2000 முதல் கி.பி 1900 வரை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் காலப்பகுதியைச் சேர்ந்தவை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தோன்றியவை. பெரும்பாலான பழங்கால பொருட்கள் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த சுடுமண் கலைப்பொருட்களாகும், மற்றவை கல், உலோகம், மரம் மற்றும் தந்தத்தில் செய்யப்பட்டவை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவை. ஒப்படைக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க தொல்பொருட்கள்  பின்வருமாறு:

* கி.பி 10-11 ஆம் நூற்றாண்டு காலத்தின்  மத்திய இந்தியாவைச் சேர்ந்த மணற்கல்லில்  செய்யப்பட்ட அப்சரா;

* கி.பி 15-16 ஆம் நூற்றாண்டு காலத்தின் மத்திய இந்தியாவைச் சேர்ந்த வெண்கலத்தில் சமண தீர்த்தங்கர்;

* கி.பி 3-4 ஆம் நூற்றாண்டு காலத்தின் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த சுடுமண் குவளை;

* கி.மு 1 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 1 ஆம் நூற்றாண்டு காலத்தின் தென்னிந்தியாவைச் சேர்ந்த கற்சிற்பம்;

* கி.பி. 17-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவின்  வெண்கல விநாயகர்;

* கி.பி 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட இந்தியாவின்  மணற்கல்லாலான  நின்ற புத்தர்;

* கி.பி. 17-18 ஆம் நூற்றாண்டு காலத்தின்  கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த வெண்கலத்திலான விஷ்ணு;

* கி.மு 2000-1800 காலத்தின் வட இந்தியாவைச் சேர்ந்த செம்பிலான மானுட உருவம்;

* கி.பி. 17-18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவின் வெண்கல கிருஷ்ணர்,

* கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தென்னிந்தியாவின் கருங்கல்லாலான கார்த்திகேயன்

சமீப காலங்களில், கலாச்சார சொத்துக்களை மீட்டெடுப்பது, இந்திய-அமெரிக்க கலாச்சார புரிதல் மற்றும் பரிமாற்றத்தின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. 2016 முதல், அமெரிக்க அரசு அதிக எண்ணிக்கையிலான கடத்தப்பட்ட அல்லது திருடப்பட்ட தொல்பொருட்களை திருப்பித் தருவதற்கு வசதி செய்துள்ளது. ஜூன் 2016-இல் பிரதமர் அமெரிக்கா சென்றபோது 10 பழங்கால பொருட்கள் திருப்பி அனுப்பப்பட்டன; 2021 செப்டம்பரில் அவர் அங்கு சென்ற போது 157 தொல்பொருட்களும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் பயணித்தபோது மேலும் 105 தொல்பொருட்களும் திருப்பி அனுப்பப்பட்டன. 2016 முதல் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய மொத்த கலாச்சார கலைப்பொருட்களின் எண்ணிக்கை 578 ஆக உள்ளது. ஒரு நாடு, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய கலாச்சார கலைப்பொருட்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்..

*****

 BR/ KV/DL



(Release ID: 2059117) Visitor Counter : 8