குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

உஜ்ஜைனில் நடைபெற்ற துப்புரவுப் பணியாளர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்

Posted On: 19 SEP 2024 1:29PM by PIB Chennai

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் இன்று (செப்டம்பர் 19, 2024) நடைபெற்ற துப்புரவுப் பணியாளர் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் இந்தூர்-உஜ்ஜைன் ஆறு வழிச் சாலை திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நமது துப்புரவுப்பணி நண்பர்கள் முன்வரிசை தூய்மைப் போராளிகள் என்று கூறினார். அவர்கள், நோய்கள், அழுக்கு மற்றும் சுகாதார அபாயங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றனர். தேச நிர்மாணத்தில் அவர்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றனர். உள்ளூர், மாநில மற்றும் தேசிய அளவில் தூய்மைத் துறையில் நாம் செய்த சாதனைகளுக்கான மிகப்பெரிய பெருமை நமது சஃபாய் (துப்புரவுப்பணியாளர்) நண்பர்களையே சாரும்.

துப்புரவு நண்பர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலனை உறுதி செய்வது அரசு மற்றும் சமுதாயத்தின் முக்கியப் பொறுப்பு என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆட்குழியை அகற்றி, இயந்திர துளைகள் மூலம் சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், துப்புரவுப் பணியாளர்கள் பயனடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு முகாம்கள் மூலமாகவும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தியப் பிரதேசத்தில் பல நகரங்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டம் 2025-ம் ஆண்டு வரை தொடரும் என்றும், முழுமையான தூய்மை என்ற இலக்கை நாம் அடைய வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். 'திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இல்லாதது' என்ற நிலையை பராமரிக்கும் அதே வேளையில், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையில் தேசிய இலக்குகளை அடைய வேண்டும்.

தூய்மை, சன்ஸ்கார் தூய்மை என்ற செய்தியை நாடு முழுவதும் பரப்பும் இயக்கம் நடைபெற்று வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். அழுக்குகளையும், குப்பைகளையும் அகற்றி பாரத அன்னைக்கு சேவை செய்ய, மக்கள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். தூய்மை இந்தியா இயக்கத்தை ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தெருவிலும் முன்னெடுத்துச் செல்லவும், இந்த இயக்கத்திற்காக உடலுழைப்பு வழங்கவும் குடிமக்கள் அனைவரும் முன்வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதைச் செய்வதன் மூலம், தேசப்பிதா மகாத்மா காந்தியின் தூய்மை தொடர்பான கொள்கைகளை நம்மால் நடைமுறைப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். தூய்மையை நோக்கிய நமது ஒரு அடி, நாடு முழுவதையும் தூய்மையாக வைத்திருப்பதில் மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தூய்மையான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க, அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

***

(Release ID: 2056555)

MM/AG/KR



(Release ID: 2056622) Visitor Counter : 32