குடியரசுத் தலைவர் செயலகம்
8-வது இந்திய தண்ணீர் வாரத்தை குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
Posted On:
17 SEP 2024 3:21PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 8-வது இந்திய நீர் வாரத்தை இன்று (17.09.2024) புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படும் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் மிகவும் முக்கியமானது என்று கூறினார். நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் கீழ், நீர், சுகாதாரம் ஆகியவற்றின் மேலாண்மையை மேம்படுத்த உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பழங்காலம் தொட்டே அனைவருக்கும் நீர் வழங்குவதற்கு நமது நாடு முன்னுரிமை அளித்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். நம் நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், நீர் சேமிப்புக்கும் மேலாண்மைக்கும் சிறந்த அமைப்புகள் இருந்தன என அவர் தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய அமைப்புகள் படிப்படியாக மறைந்தன என அவர் கூறினார். நமது அமைப்புகள் இயற்கையோடு இணைந்து இருப்பதை அடிப்படையாகக் கொண்டவை என அவர் குறிப்பிட்டார். இயற்கையைக் கட்டுப்படுத்தும் எண்ணத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமைப்புகள் இப்போது உலகம் முழுவதும் மறுபரிசீலனை செய்யப்பட்டு இயற்கையுடன் இணைந்த அமைப்புகள் முக்கியத்துவம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். நம் நாட்டில் பல்வேறு வகையான பழைய நீர்வள மேலாண்மையின் எடுத்துக்காட்டுகள் நாடு முழுவதும் உள்ளன எனவும், அவை இன்றும் பொருத்தமாக உள்ளன என்றும் அவர் கூறினார். நமது பழைய நீர் மேலாண்மை முறைகளை நவீன சூழலில் ஆராய்ச்சி செய்து நடைமுறையில் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கிணறுகள் போன்ற நீர்நிலைகள்; குளங்கள் பல நூற்றாண்டுகளாக நம் சமூகத்தின் நீர் வங்கிகளாக இருந்து வருகின்றன என அவர் தெரிவித்தார். நாம் வங்கியில் பணத்தை செலுத்திய பின்னரே வங்கியில் இருந்து பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார். அதே விஷயம் தண்ணீருக்கும் பொருந்தும் என அவர் குறப்பிட்டார். மக்கள் முதலில் தண்ணீரை சேமித்து வைத்தால்தான் அவர்களால் அந்த தண்ணீரை எடுத்துப் பயன்படுத்த முடியும் என அவர் கூறினார்.
வருமானத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் நிதி நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள் எனவும் அதேபோல், குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில்கூட தண்ணீரை சேமிக்கும் கிராமங்கள் நீர் நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தான், குஜராத்தின் பல பகுதிகளில், கிராமவாசிகள் தங்கள் முயற்சிகளாலும் சிறந்த நீர் சேமிப்பு முறைகளைப் பின்பற்றுவதன் மூலமும் தண்ணீர் பற்றாக்குறையிலிருந்து விடுபட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
பூமியில் கிடைக்கும் மொத்த நீரில் 2.5 சதவீதம் மட்டுமே நன்னீர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அதில் ஒரு சதவீதம் மட்டுமே மனித பயன்பாட்டிற்கு கிடைக்கிறது என்று அவர் தெரிவித்தார். உலக நீர்வளத்தில் இந்தியாவின் பங்கு 4 சதவீதம் என அவர் கூறினார். நீரைத் திறம்பட பயன்படுத்துவதன் மூலமே அனைவருக்கும் நீர் வழங்குவது சாத்தியமாகும் என அவர் தெரிவித்தார்.
அனைவரையும் உள்ளடக்கிய நீர் மேம்பாடும் மேலாண்மையுமே 'இந்திய நீர் வாரம் 2024-ன் இலக்கு என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த இலக்கை அடைய சரியான நடைமுறைகளைத் தேர்வு செய்ததற்காக ஜல் சக்தி அமைச்சகத்தை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பாராட்டினார்.
***
SMB/DL
(Release ID: 2055823)
Visitor Counter : 56