குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அரசியல் சாசன பதவியில் இருப்பவர் தேசத்துக்கு சிக்கலை ஏற்படுத்துவது வேதனை அளிக்கிறது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்

Posted On: 13 SEP 2024 4:15PM by PIB Chennai

அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட போதிலும், தேசத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சில தனிநபர்கள் குறித்து குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று கவலை தெரிவித்தார். இது வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க, தேச விரோத செயல்பாடு என்று அவர் குறிப்பிட்டார்.

அஜ்மீரில் உள்ள ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று (13.09.2024) உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், தேசிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுவோர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும் அவர் கூறினார்.

நாட்டின் எல்லைகளைத் தாண்டி அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இந்தியரும் நமது கலாச்சாரம், தேசியத்தின் தூதர் என்று அவர் கூறினார். இதற்கு உதாரணமாக அடல் பிகாரி வாஜ்பாயை அவர் குறிப்பிட்டார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாய், உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் பேசியபோது, இந்தியாவின் நலன்கள் குறித்து பேசியதாகவும் இந்தியாவுக்கு எதிராக அவர் ஒருபோதும் பேசவில்லை என்றும் குடியரசு துணைத் தலைவர்  குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள் மாறுபட்டபோதும், தேசிய உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புதிய கல்விக் கொள்கை எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையது அல்ல எனவும், அது தேசிய முன்முயற்சியாகும் என்றும் அவர தெரிவித்தார்.

சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி உள்ளது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கான கருவியாகவும் அது செயல்படுகிறது என்று எடுத்துரைத்தார்.

ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆனந்த் பலேராவ், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் அல்பனா கடேஜா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054543

***

PLM/RS/DL


(Release ID: 2054613) Visitor Counter : 40