பாதுகாப்பு அமைச்சகம்

நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்த தரங் சக்தி பயிற்சி உதவும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 12 SEP 2024 4:13PM by PIB Chennai

பன்னாட்டு பயிற்சியான 'தரங் சக்தி' என்பது கூட்டு நாடுகளுடன் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சி என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜோத்பூரில் நடைபெற்ற பன்னாட்டு பயிற்சியின் இரண்டாம் கட்டத்தின் சிறப்பு வாய்ந்த பார்வையாளர் தின நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், தரங் சக்தி மூலம், இந்தியா அனைத்து கூட்டு நாடுகளுடனும் தனது பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்றும், தேவையின்போது, நாம் அனைவரும் ஒன்றாக நிற்கும் என்ற நம்பிக்கையை அவர்களிடையே ஏற்படுத்துகிறது என்றும் கூறினார்.

பரஸ்பர வாழ்வு மற்றும் ஒத்துழைப்பு குறித்த, இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும், வலியுறுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர், அனைத்து நாடுகளும் ஒருவருக்கொருவர் இணைந்து அணிவகுக்க வேண்டும் என்பதில் நமது நாடு நம்பிக்கை கொண்டுள்ளது என்று கூறினார். "இதுபோன்ற சிக்கலான மற்றும் பெரிய அளவிலான பயிற்சி நடைபெறும்போது, வெவ்வேறு பணி கலாச்சாரங்கள், விமான போர் அனுபவங்கள் மற்றும் போர் கொள்கைகளைக் கொண்ட வீரர்கள் ஒருவருக்கொருவர் நிறைய கற்றுக்கொள்கிறார்கள்" என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

"இன்றைய நிகழ்வு இந்திய விமானப்படையின் மகத்தான சாதனைகளைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாகும். வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் சாதனைகளை நாங்கள் கொண்டாடுவது மட்டுமல்லாமல், எங்கள் ஆயுதப்படைகள் இப்போது உலகின் மிக சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுவதில் பெருமிதம் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

"சுதந்திரத்தின் போது இந்திய விமானப்படையில் இரண்டு வகையான விமானங்களைக் கொண்ட ஆறு படைப்பிரிவுகள் மட்டுமே இருந்தன. அதேபோல, எஞ்சியிருந்த போர்த் தளவாடங்கள் பழையவை மட்டுமின்றி, எண்ணிக்கையில் குறைவாகவும் இருந்தன. ஆனால் தற்போது உலகெங்கிலும் உள்ள சிறந்த, நவீன விமானங்கள் மற்றும் அடுத்த தலைமுறை உபகரணங்களுடன், இந்திய விமானப்படை செயல்படுகிறது.

பிரெஞ்சு நிறுவனமான சஃப்ரான் ஹெலிகாப்டர் என்ஜின்களுடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் சமீபத்தில் இணைந்ததை குறிப்பிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடு என்ற நிலையிலிருந்து தற்போது சுமார் 90 நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக நாம் நம்மை மாற்றிக் கொண்டுள்ளோம் என்று கூறினார். "ஆயுதங்கள், தளங்கள், விமானங்கள் போன்றவற்றின் உற்பத்தியில் உள்நாட்டுமயமாக்கலை நோக்கி உள்நாட்டு பாதுகாப்புத் துறை வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  தற்போது இலகுரக போர் விமானங்கள், சென்சார்கள், ரேடார்கள் உற்பத்தி மற்றும் மின்னணு போர்முறையை செயல்படுத்துவதில் நாம் அதிக அளவில் தன்னம்பிக்கை அடைந்துள்ளோம் என்று கூறினார்.

கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், தரங் சக்தி பயிற்சியில் சிறப்பு விருந்தினர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி, ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் நட்பு நாடுகளின் உயர் ராணுவ தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2054173 

***

IR/RS/KV

 



(Release ID: 2054207) Visitor Counter : 29