குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அபுதாபி பட்டத்து இளவரசர், குடியரசுத்தலைவரை சந்தித்தார்

Posted On: 09 SEP 2024 6:04PM by PIB Chennai

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று (செப்டம்பர் 9, 2024) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை, குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூன்றாவது தலைமுறை தலைமையை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக குடியரசுத்தலைவர் கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்தியாவின் விரிவான உத்திசார் கூட்டாண்மையுடன் நீண்டகால பாரம்பரியம் தொடர்வதாக குடியரசுத்தலைவர் கூறினார்.

இரு நாடுகளின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் அடிப்படையில், கடந்த பத்தாண்டுகளில் நமது வரலாற்று சிறப்புமிக்க இருதரப்பு உறவுகள் முன்னேற்றமடைந்துள்ளதாக குடியரசுத்தலைவர் மேலும் கூறினார். பட்டத்து இளவரசரின் இந்தப்  பயணத்தின் போது, புதிய துறைகளில் ஒத்துழைப்புக்கான பல ஒப்பந்தங்கள் மூலம் இந்த கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களுடன் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகள் இந்த நட்புறவின் அடித்தளமாக அமைகின்றன என்று குடியரசுத்தலைவர் கூறினார். அவர்களின் நலனை உறுதி செய்ததற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமையை அவர் பாராட்டினார். குறிப்பாக கோவிட் தொற்றுநோயின் கடினமான காலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

அமீரக சமுதாயத்தின் அனைத்து அம்சங்களிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2053180

----

IR/KPG/DL


(Release ID: 2053224) Visitor Counter : 45