பிரதமர் அலுவலகம்

தேசிய ஆசிரியர்கள் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

விருது பெற்றவர்கள் தங்கள் கற்பித்தல் அனுபவத்தையும், கற்றலை மேலும் சுவாரஸ்யமாக்க தாங்கள் பின்பற்றும் புதுமையான உத்திகளையும் பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்

இன்றைய இளைஞர்களை வளர்ந்த பாரத திட்டத்திற்கு தயார்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களின் கைகளில் உள்ளது: பிரதமர்

தேசிய கல்விக் கொள்கையின் தாக்கம் குறித்தும், தாய்மொழியில் கல்வியைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் விவாதித்தார்

உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை மாணவர்களுக்கு பல்வேறு மொழிகளில் கற்பிக்குமாறு ஆசிரியர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

ஆசிரியர்கள் தங்களது சிறந்த நடைமுறைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்

இந்தியாவின் பன்முகத்தன்மையை அறிய ஆசிரியர்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லலாம்: பிரதமர்

Posted On: 06 SEP 2024 4:06PM by PIB Chennai

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காலை 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் கலந்துரையாடினார்.

 

விருது பெற்றவர்கள் தங்களது கற்பித்தல் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். கற்றலை மேலும் சுவாரஸ்யமாக்க தாங்கள் பயன்படுத்தும் சுவாரஸ்யமான நுட்பங்கள் குறித்தும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் வழக்கமான கற்பித்தல் பணிகளுடன் தாங்கள் செய்யும் சமூகப் பணிகளின் உதாரணங்களையும் பகிர்ந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், கற்பித்தல் கலையில் அவர்களது அர்ப்பணிப்பு உணர்வையும், பல ஆண்டுகளாக அவர்கள் வெளிப்படுத்திய குறிப்பிடத்தக்க ஆர்வத்தையும் பாராட்டினார். இதற்கு இந்த விருதுகள் மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

தேசிய கல்விக் கொள்கையின் தாக்கம் குறித்து விவாதித்த பிரதமர், ஒவ்வொருவரும் தனது தாய்மொழியில் கல்வியைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார். உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளை பல்வேறு மொழிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். அதன் மூலம் மாணவர்கள் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளவும், இந்தியாவின் துடிப்பான கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் முடியும் என்றார்.

 

ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தலாம் என்று குறிப்பிட்ட பிரதமர், இது அவர்களின் கற்றலுக்கு உதவுவதோடு, தங்கள் நாட்டைப் பற்றி முழுமையான முறையில் அறிந்து கொள்ளவும் உதவும் என்று கூறினார். இது சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், உள்ளூர் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.

 

விருது பெற்ற ஆசிரியர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, தங்களது சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், இதன் மூலம் ஒவ்வொருவரும் இதுபோன்ற நடைமுறைகளைக் கற்றுக் கொள்ளவும், தகவமைத்துக் கொள்ளவும், பயனடையவும் முடியும் என்று கூறினார்.

 

ஆசிரியர்கள் தேசத்திற்கு மிக முக்கியமான சேவையை வழங்கி வருவதாகவும், இன்றைய இளைஞர்களை வளர்ந்த பாரதத்திற்கு தயார்படுத்தும் பொறுப்பு அவர்களின் கரங்களில் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

 

பின்னணி

தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம், கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், தங்கள் மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய நாட்டின் மிகச்சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும் கௌரவிப்பதும் தேசிய ஆசிரியர் விருதுகளின் நோக்கமாகும். இந்த ஆண்டு விருதுகளுக்காக, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஆசிரியர்கள், உயர்கல்வித் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆசிரியர்கள் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 ஆசிரியர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து 82 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

***

(Release ID: 2052534)

PKV/RR



(Release ID: 2052546) Visitor Counter : 43