இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரா பேட்மிண்டன் குழுவை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கௌரவித்தார்

Posted On: 04 SEP 2024 5:03PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, இந்தியா திரும்பிய இந்திய பாரா பேட்மிண்டன் குழுவினரை புதுதில்லியில் இன்று (04.09.2024) கௌரவித்தார். பாரா பேட்மிண்டனில் இந்தியா தமது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. மொத்த பதக்கங்களின் அடிப்படையில் 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் பேட்மிண்டனில் இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றது.

இந்த பாராட்டு விழாவில் பாரா பேட்மிண்டன் விளையாட்டு வீரர்களிடையே உரையாற்றிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, வீரர்களின் சாதனைகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார். இந்த வீரர்களின் சிறந்த செயல்திறன் முழு தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது என அவர் கூறினார். வீரர்களின் அர்ப்பணிப்பும், சிறந்த உணர்வும் இந்திய விளையாட்டுக்குப் புதிய உத்வேகத்தை அமைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பதக்கங்களை நூலிழையில் தவறவிட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் பேசினார். அவர்கள் பதக்கங்களை இழக்கவில்லை எனவும் விலைமதிப்பற்ற அனுபவத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் பாராலிம்பிக் போட்டிகளில், நமது பதக்கங்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய அமைச்சர், கடந்த பத்து ஆண்டுகளில் ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் நாட்டின் மேம்பட்ட செயல்திறனை எடுத்துரைத்தார்.

பாரா விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகள், பயிற்சி, வாய்ப்புகளை வழங்கி அவர்கள் மிக உயர்ந்த நிலைகளில் சிறந்து விளங்க உதவுவதில் அரசின் உறுதிப்பாட்டை அமைச்சர் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது பாரா விளையாட்டு வீரர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அரசின் ஆதரவுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

நிதேஷ் குமார் (தங்கம்), சுஹாஸ் எல்.ஒய் (வெள்ளி), துளசிமதி முருகேசன் (வெள்ளி), நித்யா ஸ்ரீ (வெண்கலம்), மனிஷா ராமதாஸ் (வெண்கலம்) ஆகிய 5 பேர், இந்த ஆண்டு பாராலிம்பிக் பேட்மிண்டனில் பதக்கங்களை வென்றனர்.

2024 செப்டம்பர் 03 நிலவரப்படி, பாராலிம்பிக்கில், அனைத்து விளையாட்டுகளிலும் சேர்த்து இந்தியா மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம், டோக்கியோ பாராலிம்பிக்கில் பெற்ற முந்தைய பதக்க எண்ணிக்கையான 19 பதக்கங்களின் எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

---

PLM/KPG/DL


(Release ID: 2051851) Visitor Counter : 47