தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நலிவடைந்த தொழிலாளர்களை வீட்டுவசதித் திட்டத்தில் சேர்க்க, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வலியுறுத்தல்
Posted On:
03 SEP 2024 1:09PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள நலிவடைந்த தொழிலாளர்களின் நலனை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், பிரதமரின் வீட்டுவசதித் திட்ட (PMAY) பலன்களை பின்தங்கிய தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்கள், நிலக்கரி அல்லாத சுரங்கத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புசாரா தொழிலாளர்களை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சேர்க்க வலியுறுத்தி, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
தகுதியான பயனாளிகளுக்கு 2 கோடி கூடுதல் வீடுகளை வழங்கும் நோக்கத்துடன், PMAY அமலாக்கத்தை 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 வரை கூடுதலாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகளை அங்கீகரிக்கிறது.
இந்த தொழிலாளர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது மட்டும் சமூக நீதி அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை என்றும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தொழிலாளர் நலனுக்கான முழுமையாக செயல்படும் MIS வலைதளம்
கூடுதலாக, கட்டடம் மற்றும் கட்டுமானம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 21 ஆகஸ்ட் 2024 அன்று தொடங்கப்பட்ட மேலாண்மை தகவல் அமைப்பு (MIS) இணையதளம் இப்போது முழுமையாக செயல்படுவதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.
காப்பீடு, சுகாதார நன்மைகள் மற்றும் வீட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு மத்திய - மாநில சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் நிதி பயன்பாடு மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் உள்ளிட்ட தரவுகளை சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை அமைப்பு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், இந்த பின்தங்கிய தொழிலாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் பயனுள்ள நலத்திட்டங்களை உருவாக்கவும் உதவும்.
தொழிலாளர் மேம்பாட்டுக்கான கூட்டு முயற்சி
இந்த ஓரங்கட்டப்பட்ட தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த முயற்சியின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தி, இந்த முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்குமாறு, பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்பட்ட நல ஆணையர்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
2024 ஆகஸ்ட் 29 முதல் அக்டோபர் 4, 2024 வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான பிராந்திய கூட்டங்களில் இந்த முன்முயற்சி குறித்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை, மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அவர்கள் நியாயமாக, தகுதியான வீட்டுவசதி மற்றும் சமூக பாதுகாப்பு நலன்களைப் பெறுவதை உறுதி செய்கிறார்கள்.
***
(Release ID: 2051218)
MM/AG/KR
(Release ID: 2051240)
Visitor Counter : 77