பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2029-ம் ஆண்டுக்குள் ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கும் ரூ. 50,000 கோடி மதிப்பில் ஏற்றுமதிக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 30 AUG 2024 4:04PM by PIB Chennai

ஒவ்வொரு துறையிலும் தற்சார்பு என்பது ஒரு வலுவான பொருளாதாரத்திற்கு அவசியம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இன்று (2024 ஆகஸ்ட் 30) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார். வலுவான உற்பத்தித் தளத்தை உருவாக்கவும், பாதுகாப்பு, ஆராய்ச்சி - மேம்பாடு, புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்கவும் அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்களை அமைத்தல், 5,500-க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட ஐந்து உள்நாட்டுமயமாக்கல் பட்டியல்கள் வெளியீடு ஆகியவை இத்துறையில் தற்சார்புக்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகள் என அவர் தெரிவித்தார். ஜிஇ-414 இன்ஜின்கள் இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது எனவும், இது நாட்டின் இயந்திர உற்பத்தி திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார். தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தை குறிப்பிட்ட அவர், அமெரிக்கப் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாகவும், அவர்கள் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் சேர உற்சாகமாக இருப்பதாகவும் கூறினார்.

பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாடு மற்ற நாடுகளைச் சார்ந்திருந்த ஒரு காலம் இருந்தது என்றும், முன்பு சுமார் 65-70% பாதுகாப்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்றும் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். ஆனால் இது இன்று மாறிவிட்டது என்று கூறிய அவர், 65% உபகரணங்கள் இப்போது இந்திய மண்ணில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றார். 35% மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.

வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றும், இந்த நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மேலும் கூறினார். 2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 3 லட்சம் கோடி மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ. 21,000 கோடியைத் தாண்டியுள்ளது என்றும் 2029-ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாட ஏற்றுமதியை ரூ.50,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஆயுதப் படைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய திரு ராஜ்நாத் சிங், ராணுவத்தில் பெண்கள் நுழைவதற்கு இருந்த பல தடைகள் நீக்கப்பட்டுள்ளன என்றார். ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதில் அரசு உறுதி பூண்டுள்ளது என திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

********

PLM/DL


(Release ID: 2050204) Visitor Counter : 67