உள்துறை அமைச்சகம்

காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 54-வது நிறுவன தினம் புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது

Posted On: 28 AUG 2024 7:41PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தனது 54-வது நிறுவன தினத்தை, புதுதில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று கொண்டாடியது. மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். புலனாய்வு அமைப்பின் இயக்குநர் திரு. தபன் குமார் டேகா, மத்திய காவல் அமைப்புகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படைகளின் தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிற துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், புதிய குற்றவியல் சட்டங்கள் குடிமக்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில், டாக்டர் ஆனந்தஸ்வரூப் குப்தா நினைவு சொற்பொழிவை நிகழ்த்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த 'ஐந்து உறுதிமொழிகள்' திட்டத்தின்படி, சட்ட அமலாக்க முகமைகள் காலனி ஆதிக்கத்தின் தளைகளை உடைத்தெறிய தற்கால மற்றும் பொருத்தமான சட்ட அமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தினார். மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டு வரப்பட்ட, புதிய குற்றவியல் சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டவை என்றும், இந்த சட்டங்களின் நோக்கம் நீதியை வழங்குவதே தவிர, தண்டனை அல்ல என்றும் உள்துறை செயலாளர் கூறினார்.

மத்திய உள்துறை செயலாளர், பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் சட்டங்களின் புதிய விதிகளை எடுத்துரைத்தார். குடிமக்கள் நட்பு நடவடிக்கைகள், தண்டனையின் புதிய வடிவமாக சமூக சேவையை அறிமுகப்படுத்துதல், முதல் முறை குற்றவாளிகளை மிகவும் மென்மையாக நடத்துதல் போன்றவை குறித்து விளக்கினார். புதிய அபராதம் அறிமுகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதில் முக்கியத்துவம், ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தில் அதிக அறிவியல் அணுகுமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தடயவியலின் பயன்பாடு மேம்பட்டிருப்பதாகவும் திரு மோகன் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில், 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கான சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் மற்றும் பாராட்டத்தக்க சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் பெற்றவர்களையும் மத்திய உள்துறை செயலாளர் கௌரவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2049521

---

IR/KPG/DL



(Release ID: 2049578) Visitor Counter : 19