பிரதமர் அலுவலகம்

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்

ரூ. 2,500 கோடி சுழல் நிதியை விடுவித்து, ரூ. 5,000 கோடி வங்கிக் கடன்களை வழங்கினார்

"தாய்மார்கள், சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்க எங்களது அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது"

"மகாராஷ்டிராவின் மரபுகள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அறியப்படுகின்றன"

"மகாராஷ்டிராவின் மகளிர் சக்தியால் ஒட்டுமொத்த இந்தியாவும் உத்வேகம் பெற்றுள்ளது"

"தேசத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் 'மகளிர் சக்தி' எப்போதும் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது"

"ஒரு சகோதரி லட்சாதிபதியாக மாறும்போது முழு குடும்பத்தின் எதிர்காலமும் சிறப்பாக மாறும்"

"ஒரு காலத்தில் மகள்களுக்கு தடைசெய்யப்பட்ட ஒவ்வொரு துறையிலும் எங்களது அரசு இப்போது அவர்களுக்கு வாய்ப்புகளைத் திறக்கிறது"

"அரசுகள் மாறலாம், ஆனால் ஒரு சமூகமாக நமது மிகப்பெரிய பொறுப்பு, பெண்

Posted On: 25 AUG 2024 3:59PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் இன்று  (25.08.2024) நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். தற்போதைய அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் சமீபத்தில் லட்சாதிபதி ஆன 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். 4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழல் நிதியை திரு நரேந்திர மோடி விடுவித்தார். 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25.8 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.5,000 கோடி வங்கிக் கடன்களையும் அவர் வழங்கினார். லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஏற்கனவே ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்த பெருந்திரளான தாய்மார்கள், சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். நேபாளத்தின் தனாஹூன் நகரில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். விபத்து நடந்தவுடன் அதிகாரிகள் தங்கள் நேபாள சகாக்களைத் தொடர்பு கொண்டதாகவும், மத்திய அமைச்சர் ரக்ஷதாய் காட்சே நேபாளத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் சிறப்பு விமானப்படை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறிய பிரதமர், மத்திய, மாநில அரசுகள் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

லட்சாதிபதி சகோதரிகள் மாநாடு என்ற இந்த மாபெரும் நிகழ்ச்சியில் தாய்மார்கள், சகோதரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு நரேந்திர மோடி, இன்று, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிதித் தொகுப்பு பல பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அவர்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தாய்மார்கள், சகோதரிகள் மாநிலத்தின் புகழ்பெற்ற கலாச்சார, பாரம்பரியத்தின் பார்வையை அளிக்கிறார்கள் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். மகாராஷ்டிராவின் பாரம்பரியம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில் போலந்து சென்றிருந்தபோது மகாராஷ்டிரத்தின் கலாச்சாரத்தை நேரில் கண்டதாக குறிப்பிட்ட பிரதமர், மகாராஷ்டிர மக்கள் போலந்து நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள் என்றார். போலந்து மக்களால் கோலாப்பூர் மக்களின் சேவை, விருந்தோம்பலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோலாப்பூர் நினைவகம் குறித்தும் அவர் பேசினார். சிவாஜி மகராஜ் வகுத்த மரபுகளை பின்பற்றி போலந்து அரச குடும்பத்தினரால் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தை நினைவு கூர்ந்த பிரதமர், தமது போலந்துப் பயணத்தின்போது இதுபோன்ற வீரம் சார்ந்த கதைகள் தமக்கு விவரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மக்களும் இதேபோன்ற பாதையைப் பின்பற்றி, உலகில் இந்த மாநிலத்தின் பெயரை உயர்த்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மகாராஷ்டிராவின் கலாச்சாரம் அந்த மண்ணின் துணிச்சலான மற்றும் தைரியமான பெண்களின் படைப்பு என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஒட்டுமொத்த இந்தியாவும் மகாராஷ்டிராவின் மகளிர் சக்தியால் உத்வேகம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். நமது ஜல்கான் வர்கரி பாரம்பரியத்தின் ஆலயமாகும் எனவும் இது மாபெரும் துறவி முக்தாயின் நிலம் என்றும் அவரது சாதனைகளும், தவமும் இன்றைய தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இன்றுவரை கூட பாஹினாபாயின் கவிதைகள் சிந்திக்க சமூகத்தைத் தூண்டுகின்றன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். மகாராஷ்டிராவின் எந்த மூலையிலும் வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும், மகளிர் சக்தியின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்று பிரதமர் மேலும் கூறினார். மகாராஷ்டிராவின் மகளிர் சக்தி பற்றி மேலும் விவரித்த திரு நரேந்திர மோடி, மாதா ஜிஜாபாய், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த பாதையை வழங்கிய நிலையில், மற்றொரு மராத்தி பெண்மணி சாவித்ரிபாய் பூலே சமூகத்தில் மகள்களின் கல்விக்கும், அவர்களின் பணிக்கும் பெரிய சக்தியாக இருந்தார் என்று கூறினார்.

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் மகளிர் சக்தி எப்போதும் பங்களிப்பு செய்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். இன்று இந்தியா வளர்ச்சியடைய முயற்சிக்கும் போது, நமது பெண் சக்தி மீண்டும் முன்னோக்கி வருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறினார். மகாராஷ்டிர மாநிலப் பெண்களின் முயற்சிகளைப் பாராட்டிய திரு நரேந்திர மோடி, ராஜமாதா ஜிஜாபாய், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் தாக்கத்தை அனைவரிடமும் காண்பதாகக் கூறினார்.

2024 மக்களவைத் தேர்தலின் போது 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க விருப்பம் தெரிவித்ததை நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 1 கோடி லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகள் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதில் மகாராஷ்டிராவில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் உருவாக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். மாநில அரசின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், முதலமைச்சர், துணை முதலமைச்சர்களின் ஒட்டுமொத்த குழுவும் ஒன்றிணைந்து மகாராஷ்டிராவில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், அவர்களை வலுப்படுத்தவும் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கியுள்ளனர் என்றார்.

லட்சாதிபதி சகோதரிகள் இயக்கம் தாய்மார்கள், சகோதரிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழி மட்டுமல்ல என்றும் குடும்பத்தினர், எதிர்கால சந்ததியினரை வலுப்படுத்துவதற்கான ஒரு இயக்கம் என்றும் பிரதமர் கூறினார். இது ஊரகப் பொருளாதாரத்தை மாற்றியமைத்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இங்குள்ள ஒவ்வொரு பெண்ணும் சமூகத்தில் தனது சமூக அந்தஸ்து உயர்கிறது என்பதை அறிவார் என்று கூறிய பிரதமர், வருமானம் அதிகரிக்கும் போது ஒரு குடும்பத்தின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டார். ஒரு சகோதரி லட்சாதிபதி சகோதரியாக மாறும்போது ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமும் சிறப்பாக மாறுகிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதில்  பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த காலத்தில் பெண்களின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். நாட்டில் கோடிக்கணக்கான பெண்களுக்கு சொந்தமாக எந்த சொத்தும் இல்லை என்றும், இது சிறு தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறுவதில் பெரும் தடையாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, பெண்கள் மீதான சுமையை குறைப்பதாக தாம் உறுதியளித்து, ஒன்றன் பின் ஒன்றாக முடிவுகளை எடுத்ததாக கூறினார். தற்போதைய அரசின் 10 ஆண்டுகால ஆட்சியையும், முந்தைய 70 ஆண்டுகால அரசுகளையும் ஒப்பிட்ட பிரதமர், கடந்த கால அரசுகளை விட தற்போதைய அரசு மகளிரின் நலனுக்காக அதிக பணிகளை செய்துள்ளது என்றார்.

ஏழைகளுக்கான வீடுகளை வீட்டின் பெண்மணியின் பெயரில் பதிவு செய்ய தமது அரசு முடிவு செய்ததைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இதுவரை கட்டப்பட்டுள்ள 4 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். தற்போது கட்டப்பட்டு வரும் 3 கோடி வீடுகளில் கூட, அவற்றில் பெரும்பாலானவை பெண்களின் பெயரிலேயே பதிவு செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

வங்கித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்களை விளக்கிய திரு நரேந்திர மோடி, பிரதமரின் ஜன் தன் (மக்கள் நிதி) திட்டத்திலும் கூட, பெரும்பாலான வங்கிக் கணக்குகள் பெண்களின் பெயரிலேயே தொடங்கப்பட்டுள்ளன என்றார். பிரதமரின் முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் 70 சதவீதம் பேர் நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் பெண்களுக்கு கடன் வழங்கப்படவில்லை என்பதை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, மகளிர் சக்தி மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அவர்கள் நேர்மையாக கடனை தவறாமல் திருப்பிச் செலுத்துவார்கள் என்றும் கூறினார். தமது அரசு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கடன் வரம்பை ரூ. 20 லட்சமாக உயர்த்தியுள்ளது என்றார்.

சாலையோர வியாபாரிகளுக்காக தொடங்கப்பட்ட ஸ்வநிதித் திட்டம் பற்றிப் பேசிய பிரதமர், ஸ்வநிதி திட்டத்தில் உத்தரவாதம் ஏதுமின்றி கடன்கள் வழங்கப்படுவதாகவும், அவற்றின் பயன்கள் பெண்களை சென்றடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கைவினைப் பொருட்கள் செய்யும் விஸ்வகர்மா குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்களுக்கு தமது அரசு உத்தரவாதம் ஏதுமின்றி பலன்களை வழங்கியுள்ளது என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களின் முக்கியத்துவம் முன்பு அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இன்று அவை இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சக்தியாக உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு கிராமம், பழங்குடிப் பகுதியிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கொண்டு வந்த நேர்மறையான மாற்றங்களை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில் 10 கோடி பெண்கள் இதில் இணைந்துள்ளதாகவும், குறைந்த வட்டியில் கடன்களை எளிதாக வழங்குவதற்காக வங்கி அமைப்பின் ஒரு பகுதியாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 25,000 கோடிக்கும் குறைவான வங்கிக் கடன்கள் அனுமதிக்கப்பட்டன என்பதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் ரூ . 9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார். அரசு வழங்கும் நேரடி உதவிகளும் கிட்டத்தட்ட 30 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

தாய்மார்கள், சகோதரிகளின் பங்கு இன்று விரிவுபடுத்தப்படுவதை பிரதமர் விளக்கினார். ஒவ்வொரு கிராமத்திலும் வங்கி சேவைகளை வழங்கி வரும் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி சகிகள், ட்ரோன்கள் மூலம் நவீன விவசாயத்தில் உதவ பெண்கள் ட்ரோன் விமானிகளாக மாறியது, கால்நடை விவசாயிகளுக்கு உதவ 2 லட்சம் பசு சகிகளுக்கு பயிற்சி அளித்தது ஆகியவற்றை அவர் உதாரணங்களாக எடுத்துரைத்தார். நவீன விவசாயம், இயற்கை விவசாயத்தில் மகளிர் சக்தி தலைமை தாங்க விவசாய சகி திட்டம் தொடங்கப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இதுபோன்ற லட்சக்கணக்கான விவசாய சகிகளை அரசு உருவாக்கப் போகிறது என்று அவர் கூறினார். இந்த இயக்கங்கள் மகள்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று பிரதமர் கூறினார். மகள்களின் வலிமை குறித்து சமூகத்தில் ஒரு புதிய சிந்தனை உருவாக்கப்படும் என்று திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.

கடந்த மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், அதில் பெண்கள் தொடர்பான திட்டங்களுக்காக ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணிபுரியும் மகளிருக்கு சிறப்பு வசதிகளான பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகளுக்கான குழந்தைகள் காப்பக வசதிகள் போன்றவற்றை உருவாக்க எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட அனைத்து துறைகளையும் பெண்களுக்கு திறக்க தமது அரசு செயல்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய அவர், போர் விமானிகள் உட்பட மூன்று ஆயுதப் படைகளிலும் பெண் அதிகாரிகள் சேர்க்கை, சைனிக் பள்ளிகள், அகாடமிகளில் சேர்க்கை, காவல்துறை, துணை ராணுவப் படையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகியவற்றை உதாரணங்களாக எடுத்துக்காட்டினார். கிராமங்களில் விவசாயம், பால்வளத் துறை தொடங்கி, புத்தொழில் புரட்சி, அரசியலில் மகள்களின் பங்களிப்பை அதிகரிக்க பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா ஆகியவை குறித்தும் அவர் பேசினார்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன், பெண்களின் பாதுகாப்பும் நாட்டின் உயர் முன்னுரிமையாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு நமது சகோதரிகள், மகள்களின் வலியையும் கோபத்தையும் நான் புரிந்துகொள்கிறேன் என்று திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மன்னிக்க முடியாத பாவம் என்றும், குற்றவாளிகளையும், அதற்கு உடந்தையாக இருந்தவரையும் விட்டுவிடக் கூடாது என்றும் நாட்டின் அனைத்து மாநில அரசுகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நினைவூட்டினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், மருத்துவமனையாக இருந்தாலும் சரி, பள்ளியாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி, காவல்துறையாக இருந்தாலும் சரி, அவை பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர்கள் தரப்பில் எந்தவிதமான அலட்சியமும் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அரசுகள் மாறலாம் என்றும் ஆனால் நமது மிகப்பெரிய பொறுப்பு பெண்களின் வாழ்க்கையையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசு தொடர்ந்து கடுமையான சட்டங்களை உருவாக்கி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். புகார்களுக்கான முதல் தகவல் அறிக்கைகள் முன்பு உரிய நேரத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதையும், வழக்குகள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதையும் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து ஒரு முழு அத்தியாயமே உருவாக்கப்பட்ட பாரதிய நியாய் சன்ஹிதாவில் (பிஎன்எஸ்) தற்போது இதுபோன்ற தடைகள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றால் -எஃப்ஐஆர் பதிவு செய்யலாம் என்றும், விரைவான நடவடிக்கை எடுப்பதையும், காவல் நிலைய மட்டத்தில் -எஃப்ஐஆரை சேதப்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். விரைவான விசாரணை நடத்தவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இது உதவும் என்று அவர் கூறினார். புதிய சட்டங்களில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதிக்க விதிகள் உள்ளன என்று பிரதமர் மேலும் தெரிவித்தார். திருமணம் என்ற பெயரில் மோசடி செய்வதற்கு எதிராக பிஎன்எஸ் சட்டம் தெளிவான நடைமுறைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எல்லா வகையிலும் துணை நிற்கும் என அவர் உறுதியளித்தார். பெண்களுக்கு எதிரான வன்முறை மனப்பான்மை இந்திய சமுதாயத்திலிருந்து ஒழிக்கப்படும் வரை நாம் ஓயப்போவதில்லை என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா முன்னேறுவதில் மகாராஷ்டிராவின் பங்கை சுட்டிக் காட்டிய பிரதமர், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் ஒளிரும் நட்சத்திரமாக மகாராஷ்டிரா திகழ்கிறது என்றார். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் மையமாக மகாராஷ்டிரா மாறி வருவதாகவும், மாநிலத்தின் எதிர்காலம் மேலும் மேலும் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்புகளில் உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். தொழில்களை ஊக்குவிக்கவும், இளைஞர்களின் கல்வி, திறன், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மாநிலத்தில் ஒரு நிலையான அரசு தேவை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்நிலையான, வளமான மகாராஷ்டிராவை உருவாக்க இந்த மாநிலத்தின் தாய்மார்களும், மகள்களும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துப் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்ன்விஸ், திரு அஜித் பவார், மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

*****

PLM / KV

 

 



(Release ID: 2048762) Visitor Counter : 30