சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

முதலாவது கொள்கை வகுப்பாளர்கள் அமைப்பை மத்திய அமைச்சர் திரு ஜேபி நடால் புதுதில்லியில் தொடங்கிவைத்தார்

Posted On: 19 AUG 2024 6:17PM by PIB Chennai

முதலாவது கொள்கை வகுப்பாளர்கள் அமைப்பை  மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் திரு ஜேபி நடால் இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார். இந்த அமைப்பின் கூட்டம்  2024, ஆகஸ்ட் 22 வரை நடைபெறும். சுகாதாரத்துறை,  வெளியுறவு அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் 15 நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், மருந்து ஒழுங்குமுறையாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

மருந்துகள் குறித்த இந்தியாவின் புத்தகத் தொகுப்பை அங்கீகரிப்பது குறித்து விவாதிப்பதையும், மத்திய அரசின் முக்கியத் திட்டமான மக்கள் மருந்தகத் திட்ட அமலாக்கம் பற்றி ஆய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்ட இந்தக் கூட்டத்தில் புர்கினா ஃபாசோ, கினியா, கானா, ஜமைக்கா, லெபனான், மொசாம்பிக், நிகரகுவா, இலங்கை, சிரியா, உகாண்டா, ஜாம்பியா உள்ளிட்ட 15 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.

லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, பசிஃபிக்,  பிராந்தியங்களின்  சுகாதார அமைச்சர்கள்,  மருந்து ஒழுங்குமுறை ஆணையங்களின் பிரதிநிதிகளை  வரவேற்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜேபி நட்டா, நோயாளிகளுக்கு பயன்தரும் வகையில் மிக உயர்ந்த  தரத்திலான  மருந்துகளை உறுதி செய்யவும், பங்கேற்கும் நாடுகளில் மருந்துகளின் தரம், பாதுகாப்பு போன்றவை குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், இது மிகவும் சிறந்த தருணம் என்றார்.  உலகின் மருந்தகம் என்று இந்தியா ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், வளரும் நாடுகளின் சுகாதாரப் பிரச்சினைகளாக கருதப்படுகின்ற மலேரியா, எச்ஐவி- எய்ட்ஸ், காசநோய் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க இந்திய மருந்துகள் உதவி செய்துள்ளன என்பதில் தாங்கள் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

இந்தியாவின் இந்தப் பங்களிப்பு உலகளாவிய சுகாதாரத்திற்கான  உறுதிப்பாட்டையும் வளரும் நாடுகளில் உள்ள சுகாதார கவனிப்பு இடைவெளியை நிரப்புவதில் அதன் பொறுப்பையும் எடுத்துரைக்கிறது என்று திரு நட்டா தெரிவித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியுடன் ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்தகம் போன்ற திட்டங்கள் அமலாக்கப்படுவது பற்றியும் அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வின் போது ஐபி ஆன்லைன் போர்ட்டல், ஏடிஆர்எம்எஸ் மென்பொருள் என்ற இரண்டு முக்கிய டிஜிட்டல் தளங்களை அமைச்சர் தொடங்கிவைத்தார். இவற்றில் ஐபி ஆன்லைன் போர்ட்டல் என்பது இந்தியாவின் மருந்துகள் தொடர்பான புத்தகத்தை டிஜிட்டல் மயமாக்கி உலகம் முழுவதும் உள்ள பங்குதாரர்கள் மருந்துகளின் தரத்தை கூடுதல் அணுகலுடன் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046712

SMB/RS/DL

***



(Release ID: 2046773) Visitor Counter : 43