பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
2024 ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் நடைபெறும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்
Posted On:
13 AUG 2024 2:13PM by PIB Chennai
அடித்தளத்தில் இருந்து ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கும், பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகளை ஊக்குவிப்பதற்கும், 2024 ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் நடைபெறும் 78-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாயத்து அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், மத்திய பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் ஆகியோர் நாளை (14-08-2024) புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கௌரவிக்க உள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் டாக்டர் சந்திரசேகர் குமார், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் இந்நிழ்ச்சியில் பங்கேற்கின்றனர். நாளை மாலை 7 மணிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.
தில்லியில் 15-08-2024 அன்று நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் சுமார் 400 சிறப்பு விருந்தினர்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நாளை (14-08-2024) காலை 10:30 மணிக்கு பஞ்சாயத்துகளில் பெண்களின் தலைமைத்துவம் குறித்த தேசிய பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தேசிய பயிலரங்கில் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், நவஜோதி இந்தியா அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் கிரண் பேடி உரையாற்றுகிறார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் திரு விவேக் பரத்வாஜ், பிற மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொள்வார்கள். 30 ஆண்டுகளாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் பெண்களின் பங்கு, அடிமட்ட அளவில் நிர்வாகம், பொதுச் சேவை வழங்கலில் பெண்களின் தலைமைத்துவம், பாலின சமத்துவம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் பங்கு போன்றவை குறித்து இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்படும். உள்ளாட்சி நிர்வாகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான உத்திகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும்.
தேசிய தலைநகருக்கு பஞ்சாயத்து பிரதிநிதிகளின் வருகை பல்வேறு நிகழ்வுகள், செயல்பாடுகளை உள்ளடக்கிய ஒரு விரிவான மற்றும் அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதமரின் அருங்காட்சியத்தைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பஞ்சாயத்து அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பதே இந்த பயணத்தின் முக்கிய அம்சமாகும். தேசிய கொண்டாட்டங்களில் கிராம நிலையிலான தலைவர்களை முன்னணியில் கொண்டு வருவதன் மூலம், கிராமப்புற இந்தியாவில் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
நாளை (14.08.2024) காலை 10:30 மணிக்கு கிராம ஊராட்சிகளில் பெண்களின் தலைமைத்துவம் குறித்த தேசிய பயிலரங்கும், நாளை (14.08.2024) மாலை 7 மணிக்கு தில்லியில் நடைபெறும் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கான பாராட்டு விழாவும் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: https://webcast.gov.in/mopr என்ற இணையதளத்திலும், https://x.com/MoPR_GoI, https://www.facebook.com/MinistryOfPanchayatiRaj, https://www.instagram.com/MinistryOfPanchayatiRaj, https://www.youtube.com/@MinistryOfPanchayatiRaj, ஆகிய சமூக ஊடக தளங்களிலும் இந்த நேரடி ஒளிபரப்பு இடம்பெறும்
*************
Release ID: 2044799
PLM/RR
(Release ID: 2044803)
Visitor Counter : 55