மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் என்ஏடிஎஸ் 2.0 இணையதளத்தைத் தொடங்கி வைத்தார்: இளம் பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சிக்காக ரூ. 100 கோடி உதவித் தொகையை விடுவித்தார்

Posted On: 30 JUL 2024 7:51PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம்- 2.0 (NATS 2.0) இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம் தொழிற்பழகுநர்களுக்கு ரூ.100 கோடி உதவித்தொகையை விடுவித்தார். இந்த தொழிற்பழகுநர்கள் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, வாகன தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த முயற்சி இளைஞர்களின் திறன், வேலைவாய்ப்பில் அரசு அதிக கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. என்ஏடிஎஸ் 2.0 இணையதளம், அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளால் பயன்படுத்தப்பட்டு தொழிற்பழகுநருக்கு சிறப்பாகப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொழிற்பழகுநர் பயிற்சிகளின் எதிர்காலம் தொழில் பழகுநர் திட்டத்துடன் கூடிய பட்டப்படிப்பு, அனைத்து தொழிற் பழகுநர்களுக்கான உதவிகள், தொழில் துறை - உயர்கல்வி ஒத்துழைப்பு, மின்-ஆளுமையை வலுப்படுத்துதல் போன்றவை தொடர்பான குழு விவாதங்களுக்கும் இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தொழில் பழகுநர் பயிற்சியை ஜனநாயகப்படுத்தவும், திறன் இடைவெளியைக் குறைக்கவும், இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும், அவர்களை எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றவும் என்ஏடிஎஸ் 2.0 தளம் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி என்று கூறினார். தற்போது தொடங்கப்பட்டுள்ள இணையதளம் தொழில் பழகுநர் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதுடன், வேலை தேடுவோர், வேலை வழங்குவோர் என இருதரப்பினருக்கும் உதவும் என்று அவர் கூறினார்.

தொழில்நுட்பம் சார்ந்த இந்த யுகத்தில் பட்டம் பெறுவது மட்டுமல்ல, திறன்களை மேம்படுத்திக் கொள்வதும் முக்கியம் என்று திரு தர்மேந்திரப் பிரதான் கூறினார். அனைத்து கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் என்ஏடிஎஸ் 2.0 (NATS 2.0) இணையதளத்தில் இணைய வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். தொழிற் பழகுநர் பணியை மக்கள் இயக்கமாக நாம் மாற்ற வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

 

***


(Release ID: 2039383) Visitor Counter : 59