பிரதமர் அலுவலகம்

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மத்திய பட்ஜெட் குறித்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரை


"பொருளாதாரத்தில் நாடு வெகு விரைவாக வளர்கிறது”

“பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு பல மடங்கு உயர்வு”

“தற்போதைய பட்ஜெட் நல்லாட்சிக்கான பட்ஜெட்”

"மக்களின் வாழ்க்கைத்தரத்தை மத்திய அரசு உறுதி செய்கிறது”

"வளர்ந்த இந்தியாவை உருவாக்க தொழில்துறையும், தனியார் துறையும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம்”

Posted On: 30 JUL 2024 1:44PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த "வளர்ந்த பாரதத்தை நோக்கிய பயணம்: மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய 2024-25 மாநாடு" தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். வளர்ச்சிக்கான அரசின் பரந்த பார்வை மற்றும் தொழில்துறையின் பங்கு ஆகியவற்றை முன்வைப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. தொழில்துறை, அரசு, தூதரக பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள் ஆகியவற்றிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொண்டனர், உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு சிஐஐ மையங்களிலிருந்தும் பலர் இணைந்தனர்.

 

கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், நாட்டின் குடிமக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஸ்திரத்தன்மையையும், உற்சாகத்தையும் அடைந்தால், நாடு ஒருபோதும் பின்தங்காது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற தம்மை அழைத்தமைக்காக இந்திய தொழில் கூட்டமைப்புக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

வளர்ச்சி குறித்த ஐயங்கள் குறித்து பெருந்தொற்று காலத்தில் வர்த்தக சமூகத்தினருடன் நடைபெற்ற விவாதங்களை குறிப்பிட்ட பிரதமர், அந்த நேரத்தில் தாம் வெளிப்படுத்திய நம்பிக்கையை நினைவு கூர்ந்தார், இன்று நாடு காணும் விரைவான வளர்ச்சியைக் குறிப்பிட்டார். "இன்று நாம் பாரதத்தை நோக்கிய பயணம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இது வெறும் உணர்வு மாற்றம் மட்டுமல்ல, இது நம்பிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் பிரதிபலிக்கிறது" என்று கூறிய அவர், உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்வதையும், 3-வது இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருவதையும் மீண்டும் சுட்டிக்காட்டினார்.

2014-ல் தற்போதைய அரசு ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த பிரதமர், பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர வேண்டிய காலத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் நாடு பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் பட்டியலில் இருந்ததையும், லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஊழல் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு உயர்த்தியுள்ளது என்றும் மோசமான நெருக்கடியில் இருந்து மீட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்து சில தகவல்களை முன்வைத்த பிரதமர், நடப்பு பட்ஜெட் ரூ.48 லட்சம் கோடி அளவிற்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும்,  2013-14ல் ரூ.16 லட்சம் கோடி அளவிற்கு பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் ஒப்பிட்டு பேசினார். 2004-ம் ஆண்டில் 90 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மூலதன செலவினம், 2014 வரையிலான 10 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இத்துடன் ஒப்பிடுகையில், இந்த முக்கியமான குறியீடு இன்று ரூ .11 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது, இது 5 மடங்கு ஆகும்.

 

இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையையும் கவனித்துக்கொள்வதில் தமது அரசு உறுதியாக உள்ளது என்பதை எடுத்துரைத்த பிரதமர், "நீங்கள் வெவ்வேறு துறைகளைப் பார்த்தால், அவை ஒவ்வொன்றிலும் இந்தியா எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பது பற்றி தெரியவரும்" என்றார். முந்தைய அரசுடன் ஒப்பிட்டுப் பேசிய திரு மோடி, கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே, நெடுஞ்சாலைகளுக்கான பட்ஜெட் 8 மடங்கு அதிகரித்துள்ளது என்றார். இதற்கிடையில், விவசாய, பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்கள் முறையே 4 மடங்கிற்கும், 2 மடங்கிற்கும் அதிகமான உயர்வைக் கண்டுள்ளன.

 

ஒவ்வொரு துறையிலும் வரலாறு காணாத வரி விலக்குகளுக்குப் பிறகும் பட்ஜெட்டில் வரலாறு காணாத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். "2014-ம் ஆண்டில், ரூ.1 கோடி வருவாய் ஈட்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்தேச வரி செலுத்த வேண்டியிருந்தநிலையில், தற்போது ரூ. 3 கோடி வரை வருமானம் கொண்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டில், ரூ. 50 கோடி வரை வருவாய் ஈட்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் 30 சதவீத வரி செலுத்த வேண்டியிருந்தது என்றும், தற்போது இது 22 சதவீதமாக உள்ளது என்றும் கூறினார். 2014-ம் ஆண்டில், நிறுவனங்கள் 30 சதவீத பெருநிறுவனங்கள் வரி செலுத்தி வந்தநிலையில், தற்போது ரூ. 400 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கு இந்த விகிதம் 25 சதவீதமாக உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் வரி குறைப்பு பற்றியது மட்டுமல்லாமல், சிறந்த நிர்வாகம் பற்றியது என்றும் பிரதமர் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு பட்ஜெட்டில் ஆரோக்கியமான பொருளாதாரம் என்ற தோற்றத்தை உருவாக்க பெரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்ததை திரு மோடி நினைவுகூர்ந்தார். ஆனால், அந்த அறிவிப்புகளை செயல்படுத்திய போது, பயன்பெற முடியவில்லை என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைக் கூட உள்கட்டமைப்புக்காக முழுமையாகச் செலவிட முடியாமல் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், அறிவிப்புகளின் போது தலைப்புச் செய்திகளாக அது இருந்தது என்று அவர் கூறினார். பங்குச் சந்தைகளும் சிறிய  ஏற்றத்தைப் பதிவு செய்த நிலையில்,  அந்த அரசு ஒருபோதும் திட்டங்களை சரியான நேரத்தில் நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளித்ததில்லை என்று தெரிவித்தார். "கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிலையை தாங்கள் மாற்றியுள்ளதாகவும், ஒவ்வொரு உள்கட்டமைப்பு திட்டத்தையும்  விரைவாக நிறைவு செய்யும் நிலையை அனைவரும் கண்டதாகவும் திரு மோடி மேலும் கூறினார்.

தற்போதைய உலக சூழ்நிலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை இதற்கு விதிவிலக்காக இருப்பதை எடுத்துரைத்தார். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு வலுவான வளர்ச்சியைக் கண்டது என்றும், உலக அளவில் குறைந்த வளர்ச்சியும், அதிக பணவீக்க நிலையும் இருந்த போது இந்தியா அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த அளவு பணவீக்கத்தைக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். தொற்றுநோய்களின் போது இந்தியாவின் நிதி பரிவர்த்தனை, உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது  என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறினார். தொற்றுநோய், இயற்கை பேரழிவுகள் மற்றும் போர்கள் போன்ற குறிப்பிடத்தக்க உலகளாவிய ஆபத்துகள் இருந்தபோதிலும், உலகளாவிய வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 16 சதவீதத்தை எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்துடன் நாடு முன்னேறுவதாக கூறிய பிரதமர் திரு மோடி, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று கூறினார்.  வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசு மேற்கொண்ட முயற்சிகளை  எடுத்துரைத்தார்.

தொழில்துறை 4.0 என்ற நிலைகளை மனதில் கொண்டு திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். முத்ரா திட்டம், புத்தொழில் இந்தியா, ஸ்டாண்டப் இந்தியா இயக்கங்களை உதாரணங்களாக சுட்டிக்காட்டிய பிரதமர், 8 கோடிக்கும் அதிகமான மக்கள் புதிய தொழில்களைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 1.40 லட்சம் புத்தொழில் நிறுவனங்கள் நாட்டில் உள்ளன என்று அவர் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிதும் பாராட்டப்பட்ட ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமர் தொகுப்புத் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இது 4 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று கூறினார். "பிரதமர் தொகுப்பு ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான விரிவான நடவடிக்கையை கொண்டது என அவர் கூறினார். இது முழுத்தீர்வுக்காக  ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் தொகுப்பின் பின்னணியில் உள்ள தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்த பிரதமர் திரு மோடி, இந்தியாவின் மனிதவளம் மற்றும் தயாரிப்புகளின் தரம் மற்றும் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகளவில் போட்டியிட வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார். இளைஞர்களின் திறன் மற்றும் வெளிப்பாட்டை மேம்படுத்த, கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து குறிப்பிட்ட திரு மோடி,  அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பதாக கூறினார். அதே நேரத்தில், பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை அளிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பங்களிப்பில் ஊக்கத்தொகையை அரசு அறிவித்துள்ளதாகவும், பிரதமர் தெரிவித்தார்.

அரசின் நோக்கமும், உறுதிப்பாடும் மிகத் தெளிவாக உள்ளதாகவும், அதனை திசை திருப்ப முடியாது என்றும் பிரதமர் கூறினார். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு, சிறந்த அணுகுமுறை, தவறு ஏற்படாமல் இருப்பதை கண்காணித்தல், தற்சார்பு இந்தியா அல்லது வளர்ச்சியடைந்த பாரதம் இந்த  உறுதிமொழி ஆகியவற்றில் 'நாட்டிற்கே முன்னுரிமை' என்ற உறுதிப்பாடு பிரதிபலிப்பதாக தெரிவித்தார். திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் கண்காணிப்பதில் கவனம் செலுத்தி வலியுறுத்தியதை அவர் எடுத்துரைத்தார்.

பட்ஜெட்டில் உற்பத்தி அம்சம் குறித்துப் பிரதமர் பேசினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம், பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை எளிமைப்படுத்துவது, பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், 14 துறைகளுக்கான PLI ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட்டில் நாட்டின் 100 மாவட்டங்களுக்கு முதலீட்டுக்கு தயாரான முதலீட்டு பூங்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 100 நகரங்களும் வளர்ச்சியடைந்த பாரத்தின் புதிய மையங்களாக மாறும் என்று அவர் கூறினார். தற்போதுள்ள தொழில் வழித்தடங்களையும் தது அரசு நவீனப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திற்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற தமது அரசின் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், அவர்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு அவர்களே தீர்வுகண்டதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்பட்டது என்றார். "எம்.எஸ்.எம்.இ.களுக்கு தேவையான நடைமுறை மூலதனம் மற்றும் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நாங்கள் 2014 முதல் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம், அவற்றின் சந்தை அணுகல் மற்றும் வாய்ப்புகள் மேம்படுத்தப்படுகின்றன, அவை முறைப்படுத்தப்படுகின்றன" என்று திரு மோடி கூறினார்.  அத்துடன் வரிக்குறைப்பை உறுதி செய்வதுடன், அவர்கள் மீதான கணக்கு தாக்கல் சுமையும் குறையும்.

அணு மின் உற்பத்திக்கான கூடுதல் ஒதுக்கீடு, விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, விவசாயிகளின் நிலங்களுக்கு எண் வழங்க பூ-ஆதார் அட்டை, விண்வெளி பொருளாதாரத்திற்கான ரூ.1000 கோடி பங்கு மூலதன நிதி, முக்கியமான கனிம இயக்கம் மற்றும் தாதுகளை வெட்டியெடுப்பதற்கான கடல் பகுதிகளை ஏலம் விடுவது போன்ற பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். "இந்த புதிய அறிவிப்புகள் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும்" என்றும் அவர் கூறினார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் தருணத்தில் உள்ள சூரியோதயத் துறைகளில், வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய பிரதமர், எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்க குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் ஒரு பெயரை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார். எனவே, குறைக்கடத்தி தொழிலை மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் கூறினார். கைபேசி உற்பத்தி புரட்சியின் தற்போதைய சகாப்தத்தில் மின்னணு உற்பத்தியை ஊக்குவிப்பது குறித்தும் அவர் பேசினார். கடந்த காலத்தில் ஒரு சிறந்த மொபைல் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இருந்த இந்தியா, எவ்வாறு ஒரு சிறந்த மொபைல் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக மாறியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பசுமை வேலைகள் துறை, பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்-வாகன தொழில்களை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டத்தையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் தூய்மையான எரிசக்தி முன்முயற்சிகள் குறித்து அதிக அளவில் விவாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இன்றைய சகாப்தத்தில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் எரிசக்தி மாற்றம் ஆகிய இரண்டும், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றன என்று கூறினார். சிறிய அணு உலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றிக் குறிப்பிட்ட திரு மோடி, எரிசக்தி கிடைப்பது மட்டுமின்றி, இந்தத் துறை தொடர்பான ஒட்டுமொத்த விநியோகச் சங்கிலியும் புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பெறும் என்றார். நாட்டின் வளர்ச்சிக்கான தங்களது உறுதிப்பாட்டை நமது தொழில்களும் தொழில்முனைவோரும் எப்போதும் வெளிப்படுத்தியுள்ளனர்" என்று கூறிய பிரதமர், சூரியோதயத்தின் அனைத்து துறைகளிலும் இந்தியாவை உலகளாவிய பங்களிப்பாளராக மாற்றுவதில் அவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"எங்கள் அரசாங்கத்திற்கு அரசியல் விருப்பத்திற்கு பஞ்சமில்லை. எங்களைப் பொறுத்தவரை, நாடு மற்றும் அதன் குடிமக்களின் அபிலாஷைகள் மிக முக்கியமானவை என்று பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த பாரத்தை உருவாக்குவதில் இந்தியாவின் தனியார் துறையே வலுவான ஊடகம் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில், செல்வத்தை உருவாக்குபவர்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளனர் என்றார். இந்தியாவின் கொள்கைகள், உறுதிப்பாடு, முடிவுகள் மற்றும் முதலீடுகள் ஆகியவை உலக முன்னேற்றத்திற்கு அடிப்படையாக மாறி வருவதாக அவர் கூறினார். உலக முதலீட்டாளர்களிடையே இந்தியா மீது ஆர்வம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், முதலீட்டாளர்களுக்கு உகந்த சாசனங்களை உருவாக்கவும், முதலீட்டுக் கொள்கைகளில் தெளிவைக் கொண்டுவரவும், முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கவும் மாநில முதலமைச்சர்களுக்கு அண்மையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தாம் அழைப்பு விடுத்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் திரு. சஞ்சீவ் பூரி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

***


PKV/IR/MM/RR/AG/KPG /DL



(Release ID: 2039324) Visitor Counter : 45