பிரதமர் அலுவலகம்

பட்ஜெட் 2024-25 குறித்து பிரதமர் தெரிவித்த கருத்துகளின் தமிழாக்கம்

Posted On: 23 JUL 2024 2:57PM by PIB Chennai

வளர்ச்சியின் புதிய உச்சங்களுக்கு நாட்டை உயர்த்துவதற்கான முக்கிய பட்ஜெட்டுக்காக  அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.  நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், அவரது ஒட்டுமொத்த அணியினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

இந்த பட்ஜெட் சமூகத்தின்  அனைத்துப் பிரிவினருக்கும் அதிகாரமளிக்கிறது. நமது கிராமங்களுக்கும், ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், வளத்திற்கான பாதையை அமைத்துத் தருகிறது.  கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.  இந்த பட்ஜெட் புதிய நடுத்தர வகுப்பினருக்கு அதிகாரமளித்தலைத் தொடர்கிறது, கல்வி, திறன் மேம்பாட்டிற்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.  நடுத்தர வகுப்பினருக்கு புதிய பலத்தை அளிப்பதோடு, பழங்குடியினர், தலித் மக்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களையும் கொண்டுள்ளது.   மேலும், பொருளாதாரத்தில் பெண்களின் பங்கேற்பை விரிவாக்கியுள்ள இந்த பட்ஜெட், சிறு வணிகர்கள், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அல்லது சிறுதொழில்கள்  ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளது. உற்பத்தியிலும்,  அடிப்படைக் கட்டமைப்பிலும் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த பட்ஜெட் பொருளாதார மேம்பாட்டையும், நீடிக்கவல்ல அதன் இயக்கத்தையும் திடப்படுத்துகிறது.

 

நண்பர்களே,

 

எங்கள் அரசின் சிறப்பு அம்சமான வேலைவாய்ப்புக்கும், சுயவேலைக்கும் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.  இன்றைய பட்ஜெட் இந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.  உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தின்  வெற்றியை நமது நாடும் உலகமும் காண்கின்றன.  தற்போது வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.  இது நாடு முழுவதும்  கோடிக்கணக்கான புதிய வேலைகளை உருவாக்கும்.  இந்தத் திட்டத்தின்கீழ், தங்களின் முதலாவது வேலையைத் தொடங்கும் இளைஞர்களுக்கு முதல் ஊதியத்தை எங்களின் அரசு வழங்கும்.  திறன் மேம்பாட்டுக்கான, உயர்கல்விக்கான  அரசின் உதவியாக இருந்தாலும், ஒருகோடி இளைஞர்களுக்கு தொழில் அனுபவப் பயிற்சியாக இருந்தாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் வறுமைச் சூழலில் உள்ள  இளைஞர்களுக்கும் பெருநிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும். சாத்தியமான புதிய  வாய்ப்புகளை ஏற்படுத்தும்.  ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும், வீட்டிலும், தொழில்முனைவோரை உருவாக்குவது எங்களின் நோக்கமாகும்.  இதற்கு உதவியாக பிணையம் இல்லாத முத்ரா கடன் தொகையின் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  இது சிறு வணிக உரிமையாளர்கள், குறிப்பாக பெண்கள், தலித்துகள், பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடி சமூகத்தினர் ஆகியோருக்கு சுயவேலைவாய்ப்பை வலுப்படுத்தும். 

 

நண்பர்களே,

 

நாம் அனைவரும் இணைந்து உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்குவோம்.  நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, நடுத்தர வகுப்பினருடன் நெருக்கமான இணைப்பைக் கொண்டுள்ளது, இது ஏழைகளுக்குக் கணிசமான வேலைவாய்ப்பை வழங்குகிறது.  இந்தத் திசையில் சிறு தொழில்களை வலுப்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாகும்.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு  எளிதாகக் கடன் கிடைக்கும் புதிய திட்டத்தை இந்த பட்ஜெட் அறிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி, ஏற்றுமதிச் சூழலை விரிவுபடுத்த முக்கியமான அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.  இந்த முன்முயற்சிகளில் உணவின் தரத்தைப்  பரிசோதிக்கும் 100 அலகுகளும், இ-வணிக ஏற்றுமதி மையங்களும் அடங்கும்.  இவை ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் இயக்கத்தை ஊக்கப்படுத்தும்.

 

நண்பர்களே,

 

நமது புத்தொழில்களுக்கும், புதிய கண்டுபிடிப்புச் சூழல்களுக்கும் பல புதிய வாய்ப்புகளை இந்த பட்ஜெட் அறிமுகம் செய்துள்ளது.  விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதியம், ஏஞ்சல் வரியை ரத்து செய்வது உட்பட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 

நண்பர்களே,

 

சாதனை அளவிலான அதிகபட்ச மூலதன செலவினம் பொருளாதாரத்தை முன்னோக்கி இயக்கும்.  12 புதிய தொழில் மையங்கள், புதிய துணைநகரங்கள் உருவாக்கம், 14 பெரிய நகரங்களுக்கு போக்குவரத்துத் திட்டங்கள், புதிய பொருளாதார மையங்கள் போன்றவை நாடுமுழுவதும் உருவாக்கப்படும் என்பது ஏராளமான புதிய வேலைவாய்ப்புகளை  ஏற்படுத்தும்.

 

நண்பர்களே,

 

தற்போது பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி, சாதனை அளவாக உயர்ந்துள்ளது.  பாதுகாப்புத்துறையை தற்சார்பு உடையதாக மாற்றுவதற்குப் பல அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன.  பாரதத்தின் மீதான உலகளாவிய ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் எண்ணற்ற வாய்ப்புகளை சுற்றுலாத் துறை வழங்குகிறது.  சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு இந்த பட்ஜெட் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. 

 

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ச்சியாக வரி நிவாரணத்தை வழங்கி வருகிறது.  இந்த பட்ஜெட்டிலும் வருமான வரிக் குறைப்புகள், நிலைக் கழிவு அதிகரிப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.  மேலும், டிடிஎஸ் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.  இதன்காரணமாக, வரி செலுத்தும் அனைவரும் கூடுதல் சேமிப்பைப் பெறமுடியும்.

 

நண்பர்களே,

 

நாட்டின் வளர்ச்சிக்குக் கிழக்கு பிராந்தியத்தின் பரவலான மேம்பாடு முக்கியமானதாகும். பூர்வோதயா என்ற தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் நமது அரசின் செயல்பாடு  புதிய வேகத்தையும், சக்தியையும் பெறும்.  நாட்டின் கிழக்குப் பகுதியில் நெடுஞ்சாலைகள், நீர்த் திட்டங்கள், மின்திட்டங்கள் போன்ற அத்தியாவசியமான அடிப்படைக் கட்டமைப்புகள்  உருவாக்கத்தால் வளர்ச்சியை நாம் வேகப்படுத்த முடியும். 

 

நண்பர்களே,

 

நாட்டின் விவசாயிகளுக்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை இந்த பட்ஜெட் அளித்துள்ளது.  உலகின் மிகப்பெரிய உணவுதானிய சேமிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து, தற்போது காய்கறி உற்பத்தி தொகுப்புகள் உருவாக்கப்படுகின்றன.  இந்த முன்முயற்சி, சிறு விவசாயிகள் தங்களின் காய்கறிகள், பழங்கள், இதர உற்பத்திப் பொருட்களை நல்ல விலைக்கு விற்பதற்குப் புதிய சந்தைகளை உருவாக்கும்.  அதேசமயம் குடும்பத்திற்கு சிறந்த ஊட்டச்சத்தை உறுதி செய்யும் வகையில், நடுத்தர வகுப்பினருக்கு காய்கறிகளும், பழங்களும் கிடைப்பது அதிகரிக்கும்.    இது வேளாண் துறையில் தற்சார்பை உருவாக்க இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.  எனவே,  பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

நண்பர்களே,

 

வறுமையை ஒழித்து ஏழைகளுக்கு அதிகாரமளிக்க மாபெரும் முன்முயற்சிகளைக் கொண்டதாக இன்றைய பட்ஜெட் உள்ளது.  ஏழைகளுக்குப் புதிதாக 3 கோடி வீடுகள் கட்டுவது என்ற முடிவு முக்கியமானதாகும்.  பழங்குடியினர் உன்னத கிராமம் திட்டம், அடிப்படை வசதிகளுடன் 5 கோடி பழங்குடி குடும்பங்களை இணைப்பதாக இருக்கும்.  மேலும், கிராம சாலைத் திட்டம், அனைத்து வானிலையிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் 25,000 புதிய  ஊரகப் பகுதிகளில் இணைப்பை வழங்கும்.  இதனால், நாடுமுழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் தொலைதூர கிராமங்கள் பயனடையும். 

 

நண்பர்களே,

 

இன்றைய பட்ஜெட் புதிய வாய்ப்புகளை உருவாக்கி இருப்பதோடு, புதிய உற்சாகத்தையும் தந்துள்ளது.  இந்த பட்ஜெட்  எண்ணற்ற வேலை வாய்ப்புகளையும், சுயவேலைக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.  சிறந்த வளர்ச்சியையும், ஒளிமயமான எதிர்காலத்தையும்  உறுதி செய்துள்ளது.  உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கான நடைமுறையில்  இந்த பட்ஜெட் கிரியா ஊக்கியாக செயல்படுவதோடு, வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தையும் அமைக்கும்.

 

நாட்டுமக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

 

***

SMB/KV/DL



(Release ID: 2036064) Visitor Counter : 11