நிதி அமைச்சகம்
முதல் முறையாக மனநலம் பற்றி பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
22 JUL 2024 2:44PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் முதன்முறையாக, மன ஆரோக்கியம், அதன் முக்கியத்துவம், அதற்கான கொள்கை பரிந்துரைகள் குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் மற்றும் தேசிய வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக மன ஆரோக்கியத்தை ஆய்வறிக்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 2015-16 தேசிய மனநல கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10.6% பெரியவர்கள் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் மனநல கோளாறுகளுக்கான சிகிச்சை இடைவெளி 70% முதல் 92% வரை இருந்தது.
மேலும், மனநோயின் பாதிப்பு கிராமப்புறங்கள், சிறிய நகரங்களுடன் ஒப்பிடும் போது, பெரிய நகரங்கள், மெட்ரோ பிராந்தியங்களில் அதிகமாக இருந்தது. கொவிட்-19 பெருந்தொற்றால் இளம் பருவத்தினரிடையே மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதை, அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு காட்டியது.
ஒட்டுமொத்தப் பொருளாதார அளவில், மனநலக் கோளாறுகளால் வேலைக்கு வராமல் இருத்தல், உற்பத்தித்திறன் குறைதல், இயலாமை, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு போன்றவற்றால் குறிப்பிடத்தக்க அளவில் உற்பத்தித்திறன் இழப்புகள் ஏற்படுகின்றன என்று ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிலைமைகள், நிதி உறுதியற்ற தன்மை ஆகியவற்றின் மூலம் மனநல அபாயத்தை வறுமை பாதிக்கிறது என்பதற்கான சான்றுகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
ஒட்டுமொத்த நல்வாழ்வின் அடிப்படை அம்சமாக மனநலம் என்பதை அங்கீகரித்துள்ள இந்த ஆய்வறிக்கை, இது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள முக்கிய முன்முயற்சிகள், கொள்கைகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது.
மாவட்ட மனநலத் திட்டத்தின் கீழ், 1.73 லட்சத்துக்கும் அதிகமான துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் மனநல சேவைகளை வழங்கும் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தேசிய முன்முயற்சிகளுடன், மாநில அளவில் செயல்படுத்தப்படும் தனித்துவமான, சுதந்திரமான முன்முயற்சிகளையும் ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது. குழந்தைகளிடமும் இளம் பருவத்தினரிடையேயும் மனநலத்தையும் நல்வாழ்வையும் ஏற்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளையும் மாநில அளவிலான முயற்சிகள் துணைபுரிகின்றன என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
மனநல சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை விரைவுபடுத்தவும், தற்போதுள்ள திட்டங்களில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து அவற்றின் செயல்திறனை அதிகபட்சமாக்கவும் முறையான அமலாக்கத்தை இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துவதுடன் முக்கிய பரிந்துரைகளையும் தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034931
***
SMB/PKV/KV/DL
(रिलीज़ आईडी: 2035379)
आगंतुक पटल : 120