நித்தி ஆயோக்

நித்தி ஆயோக்கின் "மின்னணுவியல் மூலம் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துதல்" குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது

Posted On: 18 JUL 2024 7:00PM by PIB Chennai

"மின்னணுவியல் மூலம் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துதல்" என்ற தலைப்பிலான அறிக்கையை நித்தி ஆயோக் இன்று வெளியிட்டது. இந்த அறிக்கை இந்தியாவின் மின்னணுத் துறையை விரிவாக பகுப்பாய்வு செய்கிறது. அதன் ஆற்றலையும் சவால்களையும் வலியுறுத்துகிறது. மின்னணுவியலுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாக தேவையான குறிப்பிட்ட தலையீடுகளையும் இது கோடிட்டுக் காட்டுகிறது.

 

வடிவமைப்பு, உற்பத்தி, சந்தைப்படுத்தல், விநியோகம் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை உள்ளடக்கிய நவீன உற்பத்தியில் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகள் முக்கியமானவையாகும். அவை சர்வதேச வர்த்தகத்தில் 70%-ஐ பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, குறிப்பாக மின்னணுவியல், குறைக்கடத்திகள், ஆட்டோமொபைல்கள், ரசாயனங்கள், மருந்துகள் ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவையை இது எடுத்துக்காட்டுகிறது.

 

இந்தியாவின் மின்னணுவியல் துறை விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2017 ஆம் நிதியாண்டில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2023 ஆம் நிதியாண்டில் 101 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உற்பத்தி கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இது முதன்மையாக மொபைல் போன்களால் இயக்கப்படுகிறது. இது இப்போது மொத்த மின்னணு உற்பத்தியில் 43% ஆகும். ஸ்மார்ட்போன் இறக்குமதியை நம்பியிருப்பதை இந்தியா கணிசமாகக் குறைத்துள்ளது. இப்போது 99% உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

இந்தியாவில் உற்பத்தி செய்வோம், டிஜிட்டல் இந்தியா, மேம்பட்ட உள்கட்டமைப்பு, வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் போன்ற முன்முயற்சிகள், பல்வேறு சலுகைகளின் ஆதரவுடன், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளன. இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் மின்னணு சந்தை ஒப்பீட்டளவில் மிதமானதாகவே உள்ளது, உலகளாவிய சந்தையில் 4% மட்டுமே உள்ளது. இது இதுவரை வடிவமைப்பு மற்றும் கூறு உற்பத்தியில் வரையறுக்கப்பட்ட திறன்களுடன் முதன்மையாக அசெம்பிளியில் கவனம் செலுத்தியுள்ளது.

 

4.3 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய மின்னணு சந்தையில் சீனா, தைவான், அமெரிக்கா, தென் கொரியா, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலகளாவிய தேவையில் 4% பங்கு இருந்தபோதிலும், இந்தியா தற்போது ஆண்டுதோறும் சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இது உலகளாவிய பங்கில் 1% க்கும் குறைவாகவே உள்ளது. போட்டித்தன்மையை அதிகரிக்க, இந்தியா உயர் தொழில்நுட்ப கூறுகளை உள்ளூர்மயமாக்க வேண்டும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகள் மூலம் வடிவமைப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும், உலகளாவிய தொழில்நுட்ப தலைவர்களுடன் உத்திபூர்வ கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

***

(Release ID: 2034096)

PKV/RR/KR



(Release ID: 2034216) Visitor Counter : 58