தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த சிட்டி குரூப்பின் ஆராய்ச்சி அறிக்கைக்கு மறுப்பு
Posted On:
08 JUL 2024 2:51PM by PIB Chennai
சில அச்சு, மின்னணு ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட சிட்டி குழுமத்தின் சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை, 7% வளர்ச்சி விகிதத்துடன் கூட போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்தியா போராடும் என்று கணித்துள்ளது. பருவகால தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (பி.எல்.எஃப்.எஸ்), இந்திய ரிசர்வ் வங்கியின் கே.எல்.இ.எம்.எஸ் தரவுபோன்ற அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் விரிவான, நேர்மறையான வேலைவாய்ப்பு தரவுகளைக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டது. எனவே, பொதுவெளியில் உள்ள அனைத்து அதிகாரப்பூர்வ தரவு ஆதாரங்களையும் பகுப்பாய்வு செய்யாத இத்தகைய அறிக்கைகளை தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகம் கடுமையாக மறுக்கிறது.
இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு தரவு
பிஎல்எஃப்எஸ், ஆர்பிஐ-யின் கேஎல்இஎம்எஸ் தரவுகளின்படி, இந்தியாவில் 2017-18-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை 8 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2020-21-ம் ஆண்டில் கொவிட் -19 தொற்றுநோயால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட போதிலும், இது ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது. போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க இந்தியாவால் இயலவில்லை என்ற சிட்டி குழுமத்தின் அறிக்கைக்கு இது பதிலளிப்பதாக உள்ளது. இந்த குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு உருவாக்கம், பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு அரசின் முயற்சிகளின் செயல்திறனை நிரூபிக்கிறது.
பிஎல்எஃப்எஸ் தரவு
பிஎல்எஃப்எஸ்-ன் ஆண்டறிக்கை, தொழிலாளர் சந்தை நிலவரங்களில் மேம்பட்ட போக்கை எடுத்துக்காட்டுகிறது: (i) தொழிலாளர் பங்கேற்பு விகிதம், (ii) தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் (iii) 2017-18-ம் ஆண்டு முதல் 2022-23-ம் ஆண்டு வரை 15 வயது, அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கான வேலையின்மை விகிதம். உதாரணமாக, தொழிலாளர் எண்ணிக்கை அதாவது வேலைவாய்ப்பு 2017-18 ல் 46.8%-ல் இருந்து 2022-23ல் 56% ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், நாட்டில் தொழிலாளர் பங்களிப்பும் 2017-18-ம் ஆண்டில் 49.8%-ல் இருந்து 2022-23-ம் ஆண்டில் 57.9% ஆக அதிகரித்துள்ளது. வேலையின்மை விகிதம் 2017-18-ம் ஆண்டில் 6.0% ஆகக் இருந்து 2022-23-ம் ஆண்டில் 3.2% ஆக குறைந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளது என்பதை பிஎல்எஃப்எஸ் தரவு காட்டுகிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தரவு
வணிகம் செய்வதை எளிதாக்குதல், திறன் மேம்பாட்டை மேம்படுத்துதல், பொது, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு ஊக்கத்தொகை வழங்குதல் ஆகியவற்றிற்கான அரசு முயற்சிகளால் வேலைவாய்ப்பு அதிகரிக்கின்றது. தொழிலாளர்கள் அதிக அளவில் முறையான வேலைகளில் சேருகிறார்கள் என்று இபிஎஃப்ஓ தரவு தெரிவிக்கிறது. 2023-24-ம் ஆண்டில், 1.3 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இதில் சேர்ந்தனர். இது 2018-19-ம் ஆண்டில் 61.12 லட்சம் பேர் இணைந்ததை விட இரு மடங்கிற்கும் அதிகமாகும். மேலும், கடந்த ஆறரை ஆண்டுகளில் (2017 செப்டம்பர் முதல் 2024 மார்ச் வரை) 6.2 கோடிக்கும் அதிகமான நிகர சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ-வில் இணைந்துள்ளனர்.
தரவு நம்பகத்தன்மை
அறிக்கை, ஊடகங்கள் மிகவும் நம்பகமானவை என்று குறிப்பிடும் தனியார் தரவு ஆதாரங்கள் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததாகும். எனவே, அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை விட இதுபோன்ற தனியார் தரவு ஆதாரங்களை நம்பியிருப்பது தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், சில ஆசிரியர்கள் தரவுகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றனர். இது அவர்களின் பகுப்பாய்வின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பு சூழ்நிலையின் துல்லியமான சூழ்நிலையை முன்வைக்கவில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2031529
***
(Release ID: 2031529)
SMB/IR/AG/KR
(Release ID: 2031561)
Visitor Counter : 144