பிரதமர் அலுவலகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை

Posted On: 04 JUL 2024 1:29PM by PIB Chennai

உச்சிமாநாட்டில் நேரடியாக கலந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், பிரதமரின் உரையை வாசித்தார்.

மேதகு தலைவர்களே,

2017-ம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் கஜகஸ்தான் இருந்தபோது உறுப்பினராக சேர்க்கப்பட்டதை இந்தியா பாராட்டுதலுடன் நினைவு கூர்கிறது. அதிலிருந்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒரு முழு சுற்று தலைமைப் பொறுப்புகளை நாம் நிறைவு செய்துள்ளோம். 2020-ம் ஆண்டில் அரசுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும், 2023-ம் ஆண்டில் நாட்டுத் தலைவர்களின் கவுன்சில் கூட்டத்தையும் இந்தியா நடத்தியது. எங்களது வெளியுறவுக் கொள்கையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த அமைப்பின் உறுப்பினராக கலந்து கொண்டுள்ள ஈரானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், ஹெலிகாப்டர் விபத்தில் காலமான அதிபர் ரைசி மற்றும் பிறருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிபர் லுகாஷென்கோவுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த அமைப்பின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பெலாரஸையும் வரவேற்கிறேன்.

மேதகு தலைவர்களே,

பெருந்தொற்று தாக்கம், தொடரும் மோதல்கள், அதிகரித்து வரும் பதற்றங்கள், நம்பிக்கையின்மை, உலகெங்கிலும் அதிகரித்து வரும் பல்லுயிர் பெருக்கத்தின் எண்ணிக்கை ஆகியவற்றின் பின்னணியில் நாம் இன்று கூடியுள்ளோம். இந்த நிகழ்வுகள் சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகமயமாக்கலால் ஏற்பட்ட சில பிரச்சினைகளை அவை மேலும் மோசமாக்கியுள்ளன. இந்த விளைவுகளைத் தணிப்பதற்கான பொதுவான தளத்தைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு நாம் ஒன்று கூடியுள்ளோம்.

எஸ்சிஓ ஒரு கொள்கை அடிப்படையிலான அமைப்பாகும், அதன் ஒருமித்த கருத்து அதன் உறுப்பு நாடுகளின் அணுகுமுறையை இயக்குகிறது. இந்த நேரத்தில், இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, சமத்துவம், பரஸ்பர நன்மை, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை, பலத்தைப் பயன்படுத்தாமை அல்லது படைகளைக் கொண்டு அச்சுறுத்தாமை ஆகியவற்றிற்கான பரஸ்பர மரியாதையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கொள்கைகளுக்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம் என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.

அவ்வாறு செய்யும்போது, இயல்பாகவே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அசல் இலக்குகளில் ஒன்றான பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நம்மில் பல நாடுகளுக்கும் இந்த அனுபவங்கள் உண்டு, அவை பெரும்பாலும் நமது எல்லைகளைத் தாண்டி உருவாகின்றன. இது தடுக்கப்படாமல் விடப்பட்டால், அது பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும், பாதுகாப்பான புகலிடங்களை வழங்கும், பயங்கரவாதத்தை மன்னிக்கும் நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஒரு தீர்க்கமான பதில் தேவைப்படுகிறது. பயங்கரவாத நிதியுதவி, ஆட்சேர்ப்பு ஆகியவை உறுதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும். நமது இளைஞர்களிடையே தீவிரவாதம் பரவாமல் தடுக்கவும் நாம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, இந்த விஷயத்தில் நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இன்று நம்முன் உள்ள மற்றொரு முக்கிய கவலை பருவநிலை மாற்றம் பற்றியதாகும். மாற்று எரிபொருட்களுக்கு மாறுதல், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்ளுதல், பருவநிலை-நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குதல் உள்பட உமிழ்வுகளை உறுதியுடன் குறைப்பதை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தச் சூழலில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இந்தியத் தலைமையின் போது, உருவெடுத்து வரும்  மாற்று எரிபொருள்கள் குறித்த கூட்டறிக்கை, போக்குவரத்துத் துறையில் கரியமில வாயு நீக்கம் குறித்த கருத்துரு அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேதகு தலைவர்களே,

பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான  தொடர்பு இணைப்பு தேவை. இது நமது சமூகங்களுக்கு இடையே ஒத்துழைப்பு, நம்பிக்கை  ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். தொடர்பு இணைப்பு, உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றுக்கு இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டு மரியாதை மிகவும் அவசியமாகும். இதேபோல பாரபட்சமற்ற வர்த்தக உரிமைகள், போக்குவரத்து திட்டங்களுக்கும் இது அவசியமாகும். இந்த அம்சங்கள் குறித்து எஸ்சிஓ தீவிரமாக விவாதிக்க வேண்டும்.

21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டாகும். நாம் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக மாற்றி, நமது சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய உத்தியை வகுத்து, செயற்கை நுண்ணறிவு திட்டத்தை தொடங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 'அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு' குறித்த எங்கள் அர்ப்பணிப்பு, செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு குறித்த செயல்திட்டத்தில் எஸ்சிஓ கட்டமைப்பிற்குள் பணியாற்றுவதிலும் பிரதிபலிக்கிறது.

இந்தப் பிராந்திய மக்களுடன் இந்தியா ஆழமான நாகரீக உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மத்திய ஆசியா மையமாக இருப்பதை அங்கீகரித்து, அவர்களின் நலன்கள், விருப்பங்கள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். இது அவர்களுடனான அதிக பரிமாற்றங்கள், திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றில் பிரதிபலிக்கிறது.

எங்களைப் பொறுத்தவரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது மக்களை மையமாகக் கொண்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிறுதானிய உணவுத் திருவிழா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் திரைப்பட விழா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சூரஜ்குண்ட் கைவினை மேளா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சிந்தனைக் குழாம்கள் மாநாடு, பகிரப்பட்ட புத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச மாநாடு ஆகியவற்றை இந்தியா அதன் தலைமைப் பொறுப்பின் போது ஏற்பாடு செய்தது. மற்றவர்களின் இதுபோன்ற முயற்சிகளை இயல்பாகவே நாங்கள் ஆதரிப்போம்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைச் செயலகத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட புதுதில்லி அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் 2024 ஆம் ஆண்டில் 10 வது சர்வதேச யோகா தினமும் அடங்கும்.

மேதகு தலைவர்களே,

'உலகம் ஒரே குடும்பம்' என்று பொருள்படும் வசுதைவ குடும்பகம் என்ற ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கொள்கையைக் கடைப்பிடித்து, மக்களை ஒன்றிணைக்கவும், ஒத்துழைக்கவும், வளரவும், செழிக்கவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நமக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இந்த உணர்வுகளை நாம் தொடர்ந்து நடைமுறை ஒத்துழைப்பாக மாற்ற வேண்டும். இன்று நாம் எடுக்கும் முக்கிய முடிவுகளை நான் வரவேற்கிறேன்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக கஜகஸ்தான் தரப்பினருக்கு வாழ்த்து தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள சீனாவுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***

(Release ID: 2030646)

VL/PKV/AG/RR



(Release ID: 2030749) Visitor Counter : 15