இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நாடு தயாராகி வரும் நிலையில் இந்திய வீர்ர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் #Cheer4Bharat என்ற ஹேஷ்டேக்கை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
30 JUN 2024 1:03PM by PIB Chennai
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீர்ர், வீராங்கனைகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது மனதின் குரல் வானொலி உரையில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்ட நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இந்திய விளையாட்டு வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தயார் நிலையை அங்கீகரித்துள்ள பிரதமர், உலக அரங்கில் மீண்டும் இந்தியா ஜொலிக்க அவர்களின் திறன்கள் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"டோக்கியோ ஒலிம்பிக் முடிந்த உடனேயே, நமது விளையாட்டு வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தயாரிப்புகளில் முழு மனதுடன் ஈடுபட்டனர். நாம் அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஒன்றாகச் சேர்த்துப் பார்த்தோமேயானால், அவர்கள் அனைவரும் மொத்தம் சுமார் 900 சர்வதேசப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளனர். இது மிகப் பெரிய எண்ணிக்கை" என்று பிரதமர் கூறினார்.
முதன்முறையாக நடைபெறும் சில விஷயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்த பிரதமர், "துப்பாக்கிச் சுடும் போட்டியில், நமது வீரர்களின் திறமை நன்கு வெளிப்படுகிறது. டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தகுதி பெற்றுள்ளன. துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களும் இந்திய அணியின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த முறை, நமது அணியின் உறுப்பினர்கள் மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றம் ஆகிய பிரிவுகளிலும் பங்கேற்கின்றனர். இவற்றில் அவர்கள் இதற்கு முன்பு பங்கேற்கவில்லை. இந்த முறை இந்த விளையாட்டில் வேறு விதமான உற்சாகத்தைக் காணப் போகிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.” என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவின் முந்தைய செயல்திறனை நினைவுகூர்ந்த பிரதமர், "சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நாம் நமது சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினோம். செஸ் மற்றும் பேட்மிண்டன் போட்டிகளிலும் நமது வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்" என்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற தேசத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர், #Cheer4Bharat என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஒவ்வொருவரும் விளையாட்டு வீரர்களுக்கும் உற்சாகம் அளிக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார்.
வரும் நாட்களில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியினரை தாம் சந்தித்து, ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக அவர்களை ஊக்குவிக்க இருப்பதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
***
AD/PLM/KV
(रिलीज़ आईडी: 2029720)
आगंतुक पटल : 165