நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்கும் வேளாண் தொழில்துறைக்கும் மத்தியஅரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது: திரு பிரலாத் ஜோஷி

Posted On: 25 JUN 2024 4:30PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச சர்க்கரை அமைப்பின் 64-வது கவுன்சில் கூட்டத்தை நுகர்வோர் நலன், உணவு, மற்றும் பொது விநியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி இன்று தொடங்கிவைத்தார். இந்தக் கூட்டம் வரும் 27-ம் தேதி நிறைவடைகிறது.  கரும்பு, சர்க்கரை மற்றும் இவை சார்ந்த தொழில்துறைகளில் எதிர்கால வாய்ப்புகள், சவால்கள், உத்திகள் போன்றவை குறித்து 30-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் விவாதிக்க உள்ளனர். ஏற்கனவே, 2012-ல் சர்வதேச சர்க்கரை அமைப்பின் 41-வது கூட்டத்தை இந்தியா நடத்தியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, நாட்டில் சுமார் 5 கோடி விவசாயிகள் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்தத் தொழில்துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் கூறினார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்கும் வேளாண் தொழில்துறைக்கும் மத்திய அரசு  உயர் முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

சர்க்கரை மற்றும் உயிரி எரிபொருள் துறைகளில், தொழில்நுட்பத்தையும், திறன்களையும் நவீனமாக்க இந்தியா உறுதிபூண்டிருப்பதை திரு பிரலாத் ஜோஷி  எடுத்துரைத்தார். உலகில் அதிக அளவில் சர்க்கரையைப் பயன்படுத்தும், குறிப்பிடத்தக்க அளவு உயிரி எரிபொருள் உற்பத்தி செய்யும் இந்தியாவின் நிலை பற்றி எடுத்துரைத்த  அமைச்சர், பெட்ரோலில் 12 சதவீத எத்தனால் கலக்கப்படுவதாகவும் விரைவில், இதனை 20 சதவீதம் ஆக்குவது நோக்கமாக உள்ளது என்றும் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா, இந்திய சர்க்கரை அமைப்பின் நிர்வாக இயக்குநர் திரு ஜோஸ் ஓரிவ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தையொட்டி, ‘சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி – மாறிவரும் காட்சிகள்’ என்பது பற்றிய பயிலரங்கும் இன்று நடைபெற்றது.  இந்தப் பயிலரங்கு சர்க்கரை மற்றும் எத்தனால் குறித்து பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடவும், உலகளாவிய நிலையைப் புரிந்து கொள்ளவும்  பிரதிநிதிகளுக்கு சிறந்த வாய்ப்பாக இது அமைந்தது.   சர்க்கரைத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பையும் புதிய கண்டுபிடிப்பையும் வலுப்படுத்துவதற்கு இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2028531

-----

PKV/SMB/KPG/RR



(Release ID: 2028571) Visitor Counter : 35