பிரதமர் அலுவலகம்
ஸ்ரீநகரில் நடைபெற்ற "இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்" நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Posted On:
20 JUN 2024 9:47PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் அவர்களே, இதர பிரமுகர்களே, ஜம்மு காஷ்மீர் முழுவதிலும் உள்ள எனது இளம் நண்பர்களே, சகோதர சகோதரிகளே!
இன்று காலை, நான் தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணம் செய்யத் தயாரானபோது, எனக்குள் மிகுந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நான் அடையாளம் கண்டேன். அவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்பான இன்றைய நிகழ்வு மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும்.
கடந்த வாரம் இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டிலிருந்து நான் இப்போதுதான் திரும்பியுள்ளேன். திரு மனோஜ் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைப்பது உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது நம் நாட்டை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதை மாற்றுகிறது. மற்ற நாடுகள் இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை அளித்து பலப்படுத்தி வருகின்றன. இந்திய மக்களின் விருப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன, இந்த உயர்ந்த விருப்பங்கள் நாட்டின் மிகப்பெரிய பலமாகும். இவ்வாறான விருப்பங்களுடன், அரசின் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் கணிசமாக அதிகரிக்கின்றன. இந்த அளவுகோல்களின் அடிப்படையில் எங்களை மதிப்பீடு செய்த பிறகு, மக்கள் மூன்றாவது முறையாக எங்கள் அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்தியா இப்போது நிலையான அரசின் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது, நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். கடந்த 35-40 ஆண்டுகால சாதனைகளை முறியடித்து, ஜனநாயகத்தின் மீது இளைஞர்களின் வலுவான நம்பிக்கையை நிரூபித்துள்ளீர்கள். இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு வகுத்த பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
இருப்பினும், அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரானவர்கள் ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் அதிருப்தி அடைந்துள்ளனர். வளர்ச்சியைத் தடுக்கவும், அமைதியை சீர்குலைக்கவும் அவர்கள் முயன்று வருகின்றனர். அண்மையில் நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துடன் இணைந்து உள்துறை அமைச்சர் அனைத்து ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். ஜம்மு-காஷ்மீரின் எதிரிகளைக் கையாள்வதில் எந்த முயற்சியும் விடுபட்டுவிடாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் புதிய தலைமுறை நீடித்த அமைதியை அனுபவிக்கும். ஜம்மு-காஷ்மீர் தேர்ந்தெடுத்த முன்னேற்றப் பாதையை நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம். பல்வேறு புதிய திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஸ்ரீநகர் மீண்டும் உலக அரங்கில் பிரகாசிக்கும். உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துள். மிகவும் நன்றி!
பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
SRI/BR/KV
(Release ID: 2028192)
Visitor Counter : 59
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam