பிரதமர் அலுவலகம்

பங்களாதேஷ் பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணத்தின்போது நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 22 JUN 2024 2:15PM by PIB Chennai

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,

அனைவருக்கும் வணக்கம்,

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குழுவினரை நான் மனமார வரவேற்கிறேன். கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து முறை சந்தித்திருந்தாலும், இன்றைய கூட்டம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் எங்களது அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா எங்களது முதல் அரசு விருந்தினராக இப்போது வந்துள்ளார்.

நண்பர்களே,

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற நமது கொள்கை, கிழக்கு பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கை, கடல் சார் தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வை ஆகிய அனைத்திலும் பங்களாதேஷ் உள்ளது.

கடந்த ஓராண்டில், பல முக்கியமான திட்டங்களை இணைந்து நிறைவேற்றியுள்ளோம். அகாவுரா-அகர்தலா இடையே, 6-வது இந்தியா-பங்களாதேஷ்  ரயில் இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான சரக்குப் போக்குவரத்து வசதி குல்னா-மோங்லா துறைமுகம் வழியாக தொடங்கப்பட்டுள்ளது. மோங்லா துறைமுகம் முதல் முறையாக ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 1320 மெகாவாட் மைத்ரீ அனல் மின் நிலையத்தின் இரண்டு அலகுகளும் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் கங்கை நதியில் உலகின் மிக நீண்ட நதிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நேபாளத்திலிருந்து பங்களாதேஷுக்கு இந்திய மின் தொகுப்பு வழியாக மின்சார ஏற்றுமதி, எரிசக்தித் துறையில் பிராந்திய ஒத்துழைப்புக்கான முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஒரே ஆண்டில் பல்வேறு துறைகளில் இதுபோன்ற பெரிய முன்முயற்சிகள் செயல்படுத்தப்பட்டிருப்பது நமது உறவுகளின் வேகமான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே,

புதிய துறைகளில் ஒத்துழைப்புக்கான எதிர்கால தொலைநோக்குத் திட்டத்தை இன்று நாங்கள் வகுத்துள்ளோம். பசுமை வளர்ச்சி, டிஜிட்டல் மேம்பாடு, நீலப் பொருளாதாரம், விண்வெளி போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளின் இளைஞர்களும் பயனடைவார்கள். இந்தியா, பங்களாதேஷ் கூட்டு செயற்கைக்கோள் திட்டம் புதிய வாய்ப்புகளை அளிக்கும். போக்குவரத்து இணைப்பு, வர்த்தகம், உள்ளிட்டற்றை அதிகரிக்க நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில், இரு நாடுகளுக்கு இடையில் வலுவான நல்லுறவை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். இப்போது டிஜிட்டல் மற்றும் எரிசக்தித் துறையில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். இது இரு நாடுகளின் பொருளாதாரத்தையும் உயர்த்தும். நமது பொருளாதார உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல, இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பங்களாதேஷின் சிராஜ்கஞ்சில் உள்நாட்டு சரக்குப் பெட்டக கிடங்கு கட்டுவதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.

நண்பர்களே,

54 ஆறுகள் இந்தியாவையும் பங்களாதேஷையும் இணைக்கின்றன. வெள்ள மேலாண்மை, வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை, குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றில் நாங்கள் ஒத்துழைத்து செயல்பட்டு வருகிறோம். 1996-ம் ஆண்டு கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குத் தொழில்நுட்ப அளவிலான விவாதங்களைத் தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். பங்களாதேஷில் உள்ள டீஸ்டா நதியின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து விவாதிக்க ஒரு தொழில்நுட்ப குழு விரைவில் பங்களாதேஷுக்குச் செல்லும்.

நண்பர்களே

பாதுகாப்பு உற்பத்தி முதல் ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவது வரை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தினோம். பயங்கரவாத எதிர்ப்பு, தீவிரவாதத்தை எதிர்த்தல், எல்லையை அமைதியான முறையில் நிர்வகிப்பது ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், எங்களுக்கு ஒரு பொதுவான பார்வை உள்ளது. இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியில் சேருவதற்கான பங்களாதேஷின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். பிம்ஸ்டெக் உட்பட இதர பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளில் எங்களது ஒத்துழைப்பை தொடருவோம்.

நண்பர்களே,

கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள் ஆகியவை நமது உறவின் அடித்தளமாகும். கல்வி உதவித்தொகைகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். பங்களாதேஷில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருபவர்களுக்கு மின்னணு மருத்துவ விசா வசதியை இந்தியா தொடங்கும். பங்களாதேஷின் வடமேற்கு பிராந்திய மக்களுக்கு வசதியாக ரங்க்பூரில் ஒரு புதிய உதவி தூதரகத்தை திறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

 இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி ஒத்துழைப்பு நாடாக பங்களாதேஷ் திகழ்கிறது.  பங்களாதேஷுடனான உறவுகளுக்கு நாங்கள் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறோம். நிலையான, வளமான மற்றும் முன்னேறிய பங்களாதேஷ் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கு இந்தியாவும் பங்களிப்பை வழங்கும்.  வளர்ச்சி அடைந்த பாரதம், வளர்ச்சி அடைந்த பங்களாதேஷ் என்ற  தொலைநோக்குப் பார்வைகளை நாம் இணைந்து நனவாக்குவோம்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின்  தோராயமான மொழிபெயர்ப்பாகும்.  பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கி இருந்தார்.

***

ANU/PKV/PLM/KV



(Release ID: 2028103) Visitor Counter : 22