பிரதமர் அலுவலகம்

அமெரிக்க நாடாளுமன்ற தூதுக்குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது


இந்தியாவில் தேர்தல் மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் அளவு, நியாயம் மற்றும் வெளிப்படைத் தன்மையை அமெரிக்கத் தூதுக்குழு பாராட்டியது

இந்திய – அமெரிக்க உறவுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான, இருதரப்பு ஆதரவின் சிறப்புத் தன்மையைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்

கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு தாம் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தையும் 2-வது முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றியதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்

Posted On: 20 JUN 2024 5:10PM by PIB Chennai

அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் திரு மைக்கேல் மெக்கால் தலைமையிலான 7 உறுப்பினர் தூதுக்குழு பிரதமர் திரு நரேந்திர மோடியை  இன்று சந்தித்தது.

திரு நான்சி பெலோசி, திரு கிரிகோரி மீக்ஸ், திரு மரியாண்டே மில்லர் மீக்ஸ், திரு நிக்கோல்  மல்லியோடாக்கிஸ், திரு அமரீஷ் பாபுலால் “அமி பேரா”,  திரு ஜிம் மெக்கவர்ன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்  பெற்றிருந்த மற்ற உறுப்பினர்கள்.

தொடர்ந்து 3-வது முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க  தேர்தல் வெற்றிக்காக பிரதமருக்குத் தூதுக்குழு  உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அண்மையில் நிறைவடைந்த உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளின் அளவு, நியாயம் மற்றும் வெளிப்படைத் தன்மைக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்திய – அமெரிக்க உறவுகள் மிகவும் பலன் அளிக்கக் கூடியது என்று தெரிவித்த தூதுக்குழுவினர், வர்த்தகம், புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, மக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் விரிவான உத்திப்பூர்வ உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதில் தங்களின் வலுவான ஆதரவை வெளிப்படுத்தினர்.

இந்தியஅமெரிக்க உறவுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் தொடர்ச்சியான, இருதரப்பு ஆதரவின் முக்கியப் பங்களிப்பைப் பிரதமர் எடுத்துரைத்தார். இது பகிரப்பட்ட  ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான மதிப்பு, மக்களுக்கிடையேயான வலுவான உறவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.  உலகளாவிய  நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு தாம் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தையும், நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புடன் 2-வது முறை உரையாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

***

AD/SMB/KPG/DL



(Release ID: 2027168) Visitor Counter : 34