பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கார்கில் வெற்றியின் 25 ஆண்டுகளை நினைவுகூர இந்திய ராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பயணம் தொடங்கியது

Posted On: 12 JUN 2024 4:15PM by PIB Chennai

1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது இந்தியா பாகிஸ்தானை வெற்றிகொண்டதன் 25-வது ஆண்டினை நினைவுகூரும் வகையிலும், கார்கில் வீரர்களின் துணிவு மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையிலும்,  இந்தியா முழுவதற்குமான  மோட்டார் சைக்கிள் பயணம் இன்று தொடங்கியது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தில் ஒவ்வொன்றிலும் 8 மோட்டார் சைக்கிள்களுடன் மூன்று அணியினர் கிழக்கே தின்ஜான், மேற்கே துவாரகா, தெற்கே தனுஷ்கோடி என நாட்டின் மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டனர். இதில் ஈடுபட்டுள்ளவர்கள் பயணம் செய்யும் வழியில் வசிக்கின்ற கார்கில் வீரர்கள், வீர நங்கைகள், மூத்த ராணுவ வீரர்கள் ஆகியோரை சந்திக்க உள்ளனர். இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதை  ஊக்கப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செல்லும் வழியில் உள்ள போர் நினைவுச் சின்னங்களிலும் இவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.

தின்ஜானிலிருந்து புறப்பட்ட அணியினர் குவஹாத்தி, கோரக்பூர், லக்னோ, ஆக்ரா வழியாக சுமார் 2489 கிலோ மீட்டர் பயணம் செய்து தில்லியை அடைவார்கள்.

துவாரகாவில் இருந்து புறப்பட்ட அணியினர் அகமதாபாத், உதய்பூர், ஜெய்பூர், ஆல்வார் வழியாக சுமார் 1565 கிலோ மீட்டர் பயணம் செய்து தில்லியை அடைவார்கள்.

தனுஷ்கோடியிலிருந்து மதுரை, கோயம்புத்தூர். பெங்களூரு, ஹைதராபாத், போபால், குவாலியர் வழியாக சுமார் 2963 கிலோ மீட்டர் பயணம் செய்து தில்லியை அடைவார்கள்.

ஜூன் 26 அன்று இந்த அணியினர் தில்லிக்கு சென்ற பின் இரண்டு அணிகளாகி  ஒரு அணியினர் அம்பாலா, அமிர்தசரஸ், ஜம்மு, உதம்பூர், ஸ்ரீநகர் வழியாக  சுமார் 1085 கிலோ மீட்டர் பயணம் செய்து கார்கில் போரின் முக்கியப் பகுதியான திராசில் உள்ள கூன்குன்றுக்கு செல்வார்கள்.

மற்றொரு அணியினர் மணாலி, டாங்ஸ்டே, லே வழியாக சுமார் 1509 கிலோ மீட்டர் பயணம் செய்து திராஸ் பகுதியை சென்றடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2024711

***

SRI/SMB/RS/DL


(Release ID: 2024823) Visitor Counter : 87