பிரதமர் அலுவலகம்

பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் பொறுப்பேற்றுக் கொண்டார்


"பிரதமர் அலுவலகம் சேவை நிறுவனமாகவும், மக்களின் பிரதமர் அலுவலகமாகவும் மாற வேண்டும்"

"முழு தேசமும் இந்த அணி மீது நம்பிக்கை வைத்துள்ளது"

"ஒன்றிணைந்து, வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற நோக்கத்துடன் 'தேசம் முதலில்' என்ற இலக்கை அடைவோம்"

"வேறு எந்த நாடும் அடையாத உயரத்திற்கு நாட்டை நாம் கொண்டு செல்ல வேண்டும்"
"இந்தத் தேர்தல்கள் அரசு ஊழியர்களின் முயற்சிகளுக்கு அங்கீகார முத்திரை அளிக்கின்றன"

Posted On: 10 JUN 2024 5:33PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பிரதமர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய திரு. மோடி, பிரதமர் அலுவலகத்தை சேவை நிறுவனமாகவும், மக்களின் பிரதமர் அலுவலகமாகவும் ஆரம்பத்திலிருந்தே மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதிபடக் கூறினார். "பிரதமர் அலுவலகத்தை புதிய சக்தி மற்றும் உத்வேகம் அளிக்கும் ஒரு கிரியா ஊக்கியாக வளர்த்தெடுக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்" என்று பிரதமர் கூறினார்.

வலிமை, அர்ப்பணிப்பு மற்றும் தீர்மானம் கொண்ட புதிய சக்தியை அரசு குறிக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி, அர்ப்பணிப்புடன் மக்களுக்கு சேவை செய்வதில் பிரதமர் அலுவலகம் முதன்மையானது என்று நம்பிக்கை தெரிவித்தார். அரசை இயக்குவது மோடி மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மனங்கள் ஒன்றிணைந்து பொறுப்புகளைச் சுமக்கின்றன, இதன் விளைவாக, குடிமக்கள் தான் அதன் திறன்களின் மகத்துவத்திற்கு சாட்சிகளாக மாறுகிறார்கள் என்று அவர் எடுத்துரைத்தார்.

தமது குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நேரக் கட்டுப்பாடு, சிந்தனை வரம்பு அல்லது முயற்சிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை என்பதை திரு மோடி அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒட்டுமொத்த தேசமும் இந்த அணி மீது நம்பிக்கை வைத்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

மது குழுவில் ஒரு பகுதியாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார், மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்த பயணத்தின் ஒரு பகுதியாக சேரவும், தேசத்தைக் கட்டியெழுப்பவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். "வளர்ச்சியடைந் பாரதம் 2047 என்ற ஒரே நோக்கத்துடன் 'தேசம் முதலில்' என்ற இலக்கை நாம் ஒன்றிணைந்து அடைவோம்" என்று பிரதமர் கூறியுள்ளார். அவரது ஒவ்வொரு நொடியும் தேசத்திற்கு சொந்தமானது என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

விருப்பம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் கலவையானது உறுதியை உருவாக்குகிறது, அதே நேரத்தில் உறுதிப்பாடு கடின உழைப்பால் நிறைவு செய்யப்படும்போது வெற்றி அடையப்படுகிறது என்று பிரதமர் மோடி விளக்கினார். ஒருவரின் விருப்பம் நிலையானதாக இருந்தால், அது ஒரு தீர்மானத்தின் வடிவத்தை எடுக்கும், அதேசமயம் தொடர்ந்து புதிய வடிவங்களை எடுக்கும் ஒரு விருப்பம் ஒரு அலை மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்திய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளாக செய்த பணிகளை விஞ்சும் வகையில் எதிர்காலத்தில் தமது குழுவினர் உலகத் தரத்தை எட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "வேறு எந்த நாடும் எட்டாத உயரத்திற்கு தேசத்தை நாம் கொண்டு செல்ல வேண்டும்" என்று திரு மோடி கேட்டுக்கொண்டார்.

சிந்தனையில் தெளிவு, முடிவுகளில் நம்பிக்கை மற்றும் செயல்படுவதற்கான குணம் ஆகியவை வெற்றிக்கான முன்நிபந்தனைகள் என்று பிரதமர் மோடி எடுத்துரைத்தார். "இந்த மூன்று விஷயங்களும் நம்மிடம் இருந்தால், தோல்வி அருகில் வருவதற்கு வாய்ப்பில்லை" என்று அவர் மேலும் கூறினார்.

தொலைநோக்குப் பார்வைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இந்திய அரசின் ஊழியர்களைப் பாராட்டிய பிரதமர், அரசின் சாதனைகளில் அவர்கள் பெரும் பங்கு பெறத் தகுதியானவர்கள் என்று கூறினார். "இந்தத் தேர்தல்கள் அரசு ஊழியர்களின் முயற்சிகளுக்கு அங்கீகார முத்திரையை பதித்துள்ளன" என்று பிரதமர் மோடி கூறினார். புதிய யோசனைகளை உருவாக்கவும், செய்யப்படும் வேலையின் அளவை அதிகரிக்கவும் அவர் குழுவை ஊக்குவித்தார். தமது ஆற்றலின் ரகசியத்தை வெளியிட்டு தமது உரையை நிறைவு செய்த பிரதமர், தமக்குள் இருக்கும் மாணவரை உயிர்ப்புடன் வைத்திருப்பவரே வெற்றிகரமான மனிதர் என்று கூறினார்.

-------------------

 

PKV/RS/DL



(Release ID: 2023807) Visitor Counter : 50