அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
10,000 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இலக்கை எட்டியது, சி.எஸ்.ஐ.ஆர் இன் ‘ஃபினோம் இந்தியா' திட்டம்
Posted On:
03 JUN 2024 5:51PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), தனது சுகாதார கண்காணிப்பு திட்டமான ‘ஃபினோம் இந்தியா- சி.எஸ்.ஐ.ஆர் சுகாதார மக்கள் குழு அறிவு தளத்தின்’ முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ஜூன் 3-ஆம் தேதி, கோவாவில் உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பு நிகழ்வை சி.எஸ்.ஐ.ஆர் ஏற்பாடு செய்தது. சி.எஸ்.ஐ.ஆர்-மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சௌவிக் மைத்தி, சி.எஸ்.ஐ.ஆர்- தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சுனில் குமார் சிங், சி.எஸ்.ஐ.ஆர்-மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் சாந்தனு சென்குப்தா, சி.எஸ்.ஐ.ஆர்-இன் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் ராஜேந்திர பிரசாத் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடையே பேசிய டாக்டர் சாந்தனு சென்குப்தா, நீரிழிவு, கல்லீரல் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட இருதய -வளர்சிதை மாற்ற நோய்களுக்கு மேம்பட்ட துல்லிய மாதிரியை உருவாக்கும் நோக்கத்தோடு முதன் முறையாக நாடு தழுவிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்த நோய்கள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் மரபணு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளைக் கொண்டிருப்பதால் இதுபோன்ற ஆய்வு முக்கியமானது, என்றார் அவர்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கான பத்தாயிரம் மாதிரிகளை இந்த ஆய்வு கடந்து இருப்பதைக் குறிப்பிட்ட மூத்த முதன்மை விஞ்ஞானி, இது போன்ற மாதிரிகள் அடங்கிய முன்முயற்சியை நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "நாம் சுமார் 1 லட்சம் அல்லது 10 லட்சம் மாதிரிகளைப் பெறுகிறோம் என்றால், அது நாட்டின் அனைத்து முக்கிய அளவுருக்களையும் மறுவரையறை செய்ய எங்களுக்கு உதவும்" என்று அவர் கூறினார். மாதிரி சேகரிப்புக்கு குறைந்த செலவில் நிலையான இயக்க நடைமுறையை சி.எஸ்.ஐ.ஆர் உருவாக்கியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
****
BR/RR/DL
(Release ID: 2022758)
Visitor Counter : 71