தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ) மாணவர் 'லா சினிஃப்' விருதைப் பெற்றுள்ளார்

Posted On: 24 MAY 2024 3:15PM by PIB Chennai

77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் (எஃப்.டி.ஐ.ஐ) மாணவர் சித்தானந்த் நாயக், “சன் ஃபிளவர்ஸ் வெர் தி ஃபர்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ” என்ற குறும்படத்திற்காக 'லா சினிஃப்' விருதைப் பெற்றுள்ளார். 2024 மே 23 அன்று அதிகாரப்பூர்வமாக வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர் இயக்குநரான சித்தானந்த் நாயர் இந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டார்.

சித்தானந்த் நாயக் இந்தக் குறும்படத்தின் இயக்குநராக உள்ள நிலையில், சூரஜ் தாக்கூர் ஒளிப்பதிவாளராகவும், வி. மனோஜ் படத்தொகுப்பாளராகவும், அபிஷேக் கதம் ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இந்திய சினிமாவுக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக உள்ளது. சர்வதேச திரைப்பட அரங்கில், இந்தியத் திரைப்படங்கள், பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன. குறிப்பாக இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்களின் திரைப்படங்கள் கடந்த 5 ஆண்டுகளாக இந்த விழாவில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. 73-வது கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்த நிறுவனத்தின் மாணவர் ‘கேட் டாக்’ திரைப்படத்திற்கு விருது பெற்ற நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பின் 77-வது திரைப்பட விழாவில் மற்றொரு மாணவர் விருது பெற்றுள்ளார்.  எஃப்.டி.ஐ.ஐ-ன் முன்னாள் மாணவர்களான பாயல் கபாடியா, மைசம் அலி, சந்தோஷ் சிவன் ஆகியோரும் இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

எஃப்.டி.ஐ.ஐ-ல் தொலைக்காட்சி பயிற்சி  வகுப்பு மாணவர் ஒருவரின் திரைப்படம் கௌரவம் மிக்க இந்தத் திரைப்பட விழாவில்  தெரிவு செய்யப்பட்டு விருது பெறுவது இதுவே முதன் முறையாகும். சித்தானந்த் நாயக் இந்தப் பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு முன்  53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 75 படைப்பாக்க மனங்கள் என்ற வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஆதரவளிக்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக முன்முயற்சியில், தேர்வு செய்யப்பட்டவராக இருந்தார்.

இந்த குறும்படத்தில் பணியாற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எஃப்.டி.ஐ.ஐ தலைவர்  திரு ஆர் மாதவன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில்,  லா சினிஃப்  என்பது  அதிகாரப்பூர்வ விருதுப் பிரிவாகும். உலகம் முழுவதும் உள்ள  திரைப்படப் பயிற்சிப் பள்ளிகளின் புதிய திறமையாளர்களை ஊக்குவிப்பதையும், திரைப்படங்களை அங்கீகரிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2021475

-----

AD/SMB/KPG/RR



(Release ID: 2021506) Visitor Counter : 84