கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

மத்திய கப்பல் துறை அமைச்சகம், சர்வதேச கடல்சார் பெண்கள் தினத்தை இன்று கொண்டாடியது

Posted On: 18 MAY 2024 6:50PM by PIB Chennai

பெண் மாலுமிகளின் முக்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் புதுதில்லியில் இன்று (18.05.2024) சர்வதேச கடல்சார் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது.

இந்த தினத்தின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், "கடல்சார் பாதுகாப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்கள்" என்பதாகும்.

இந்தக் கொண்டாட்டத்தின் போது, 27 பெண் மாலுமிகள் மற்றும் இந்தத் துறையைச் சேர்ந்த சில தொழில் வல்லுநர்கள் கௌரவிக்கப்பட்டனர். பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் செலுத்தும் இந்த துறையில் பெண்களும் முன்னேறும் வகையில் முன்னுதாரணமாக இந்தப் பெண்கள் உள்ளனர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய கப்பல் துறைச் செயலாளர் திரு டி.கே.ராமச்சந்திரன், இந்த சர்வதேச கடல்சார் பெண்கள் தினத்தில், கடல்சார் துறையில் பெண்களின் பங்களிப்பை இத்துறை கௌரவிப்பதாக கூறினார். நிலையான மற்றும் பாலின சமத்துவத்துடன் கூடிய எதிர்காலத்தை நோக்கி நாம் பயணிப்பதாக அவர் தெரிவித்தார். இந்தத் துறையில் உள்ள தடைகளைத் தகர்த்தெறிந்து பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க, இத்துறையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நாட்டில் 9 ஆண்டுகளில், ஆண் மற்றும் பெண் மாலுமிகளின் மொத்த எண்ணிக்கை 140 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டில், இந்திய மாலுமிகளின் மொத்த எண்ணிக்கை 1,17,090 ஆக இருந்தது, இது 2023-ல் 2,80,000 ஆக உயர்ந்தது. 

2014-ம் ஆண்டில் 1,699 பெண் மாலுமிகள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 10,440 ஆக அதிகரித்துள்ளது.  இதன்படி, இந்திய பெண் மாலுமிகளின் எண்ணிக்கை 514 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது, 15.05.2024 நிலவரப்படி பதிவு செய்யப்பட்ட மொத்த பெண் மாலுமிகள் எண்ணிக்கை 13,371 ஆகவும், 31.12.2023 வரை செயல்பாட்டில் உள்ள பெண் மாலுமிகள் எண்ணிக்கை 4770 ஆகவும் உள்ளது.

***

ANU/SRI/PLM/KV



(Release ID: 2021039) Visitor Counter : 56