சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச தலசீமியா தினம்

தலசீமியாவை சரியான நேரத்தில் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்: மத்திய சுகாதாரத் துறை செயலாளர் வலியுறுத்தல்

Posted On: 08 MAY 2024 3:42PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, தலசீமியாவை உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சரியான நேரத்தில் அதைத் தடுப்பதன் மூலம் மட்டுமே, இந்த நோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று அவர் கூறினார். சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் பேசினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரத் துறை செயலாளர், "தலசீமியாவைச் சமாளிக்க சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் தடுப்பு ஆகியவை மிகவும் பயனுள்ள உத்திகள்" என்று கூறினார். நாட்டில் கிட்டத்தட்ட 1 லட்சம் தலசீமியா நோயாளிகள் உள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார். பரிசோதனை மூலம் சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து முன்கூட்டியே செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

 

இந்த விஷயத்தைச் சுற்றி பரந்த விழிப்புணர்வு தேவை என்பதையும் திரு அபூர்வ சந்திரா எடுத்துரைத்தார். "இன்னும் பலருக்கு இந்த நோய் குறித்தும் இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும் தெரியவில்லை. தலசீமியா குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு இந்த அரங்கில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்" என்று அவர் கூறினார். இந்தத் திசையில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக, தலசீமியாவுக்கு பயனுள்ள தடுப்பு முறைகள் மற்றும் உகந்த சிகிச்சையை ஊக்குவிப்பதற்காக இந்திய குழந்தை மருத்துவம் மற்றும் தலசீமிக்ஸ் இந்தியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட்டார்.

(https://youtu.be/H__bidXcanE?si=-_87PEPxAdsPNaw1).

 

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தற்போதுள்ள இனப்பெருக்கம் மற்றும் குழந்தை நலத் திட்டங்களில் கட்டாய தலசீமியா பரிசோதனையை இந்த நோய் பரவுவதைக் குறைக்கும் வழிமுறையாக சேர்க்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் வாதிட்டார். சில மாநிலங்கள் தங்கள் பொது சுகாதாரத் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் இதைச் சேர்த்துள்ளன என்று அவர் கூறினார்; தலசீமியா பரிசோதனையை விரிவுபடுத்த மாநிலங்கள் வலியுறுத்தப்படும்.

 

தலசீமியா என்பது பரம்பரை ரத்தக் கோளாறு ஆகும். இது உடலில் இயல்பை விட ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சர்வதேச தலசீமியா தினம், நோய் தடுப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பங்குதாரர்களை உணர்த்துவதற்கும், ஆரம்பகாலக் கண்டறிதலை ஊக்குவிப்பதற்கும், தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான பராமரிப்பை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமான தளமாகச் செயல்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், "வாழ்க்கையை மேம்படுத்துதல், முன்னேற்றத்தைத் தழுவுதல்: அனைவருக்கும் சமமான மற்றும் அணுகக்கூடிய தலசீமியா சிகிச்சை" என்பதாகும். விரிவான தலசீமியா பராமரிப்புக்கான உலகளாவிய அணுகலை நோக்கிய கூட்டு நோக்கத்தை இது உள்ளடக்கியுள்ளது.

 

தேசிய சுகாதார இயக்கத்தின் திருமதி ஆராதனா பட்நாயக், இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் தலைவர் டாக்டர் ஜி.வி.பசவராஜா, தலசீமிக்ஸ் இந்தியா செயலாளர், திருமதி ஷோபா துலி, ஐ.ஏ.பி.யின் பி.எச்.ஓ பிரிவின் கவுரவ செயலாளர் டாக்டர் மானஸ் கல்ரா மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

*****

PKV/RR/KR

 



(Release ID: 2019964) Visitor Counter : 55