பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, உஸ்பெகிஸ்தானுக்கு பயணம்

Posted On: 15 APR 2024 11:20AM by PIB Chennai

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, 2024 ஏப்ரல் 15 முதல் 18 வரை உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது இந்தியாவிற்கும் உஸ்பெகிஸ்தான் குடியரசிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

15 ஏப்ரல் 2024 அன்று, ஜெனரல் மனோஜ் பாண்டே உஸ்பெகிஸ்தான் குடியரசின் உயர்மட்ட பாதுகாப்புத் தலைமையுடன் உரையாடல்களில் ஈடுபடுவார். உஸ்பெகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் பகோதிர் குர்பனோவுடன் சந்திப்புகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் துணைப் பாதுகாப்பு அமைச்சரும், ஆயுதப்படைகளின் பொது ஊழியர்களின் தலைவருமான மேஜர் ஜெனரல் கல்முகமெடோவ் ஷுக்ரத் கேரட்ஜனோவிச், துணை அமைச்சரும், விமானம் மற்றும் விமானப் பாதுகாப்பு படைகளின் தலைவருமான மேஜர் ஜெனரல் புர்கனோவ் அஹ்மத் ஜமாலோவிச் ஆகியோருடனும் பேச்சுவார்த்தையில்  அவர் ஈடுபடுவார். இந்தப் பேச்சுவார்த்தைகள் வலுவான ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கியமானவையாகும். உஸ்பெகிஸ்தானின் வளமான ராணுவ வரலாறு மற்றும் சாதனைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும் ஹஸ்ட் இமாம் குழுமத்தின் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து ஆயுதப்படை அருங்காட்சியகத்திற்கு வருகை புரிவதும் இந்தப் பயணத்திட்டத்தில் அடங்கும்.

2024, ஏப்ரல் 16 அன்று, இந்தியாவின் 2-வது பிரதமரான மறைந்த திரு லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஜெனரல் மனோஜ் பாண்டே அஞ்சலி செலுத்துவார். அதன்பிறகு, இரண்டாம் உலகப் போரில் உஸ்பெகிஸ்தானின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்களை நினைவுகூரும் வகையில் அவர் வெற்றி பூங்காவை பார்வையிடுவார். அன்றைய தினம் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதுமையான தொழில்நுட்பங்களுக்கான மையத்திற்கு விஜயம் செய்வதும் அடங்கும். அங்கு பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் உஸ்பெகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் குறித்த நுண்ணறிவை தலைமைத் தளபதி பெறுவார். பின்னர், ஜெனரல் மனோஜ் பாண்டே உஸ்பெகிஸ்தான் ஆயுதப்படை அகாடமிக்குச் சென்று, இந்தியாவின் உதவியுடன் நிறுவப்பட்ட அகாடமியில் தகவல் தொழில்நுட்ப ஆய்வு மையத்தை திறந்து வைக்கிறார்.

2024, ஏப்ரல் 17 அன்று சமர்க்கண்ட் செல்லும் ஜெனரல் பாண்டே, மத்திய ராணுவ மாவட்டத்தின் தளபதியைச் சந்திப்பார். இந்தப் பயணம், ஏப்ரல் 18 அன்று டெர்மெஸில் முடிவடையும். அங்கு தலைமைத் தளபதி இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆயுதப்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியைக் காணத் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்த பரஸ்பர செயல்பாடு மற்றும் தோழமையை எடுத்துக்காட்டுகிறது. டெர்மெஸ் அருங்காட்சியகம் மற்றும் சுர்கந்தர்யா பிராந்தியத்தின் வரலாற்று நினைவுச் சின்னங்களையும் பார்வையிடும் அவர், உஸ்பெகிஸ்தானின் புகழ்பெற்ற கடந்த காலம் மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளை நேரடியாக பார்வையிடுவார்.

ஜெனரல் மனோஜ் பாண்டேவின் வருகை இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

----

ANU/PKV/KPG/KV



(Release ID: 2017933) Visitor Counter : 67